புதுச்சேரி

வர்த்தக சபை நிர்வாகிகள் கலெக்டர் வல்லவனிடம் மனு அளித்த காட்சி.

கலெக்டரிடம் புதுவை வணிகர்கள் மனு

Published On 2022-08-02 09:15 GMT   |   Update On 2022-08-02 09:15 GMT
  • புதுவை சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றம்
  • பெயர் பலகைகள், விளம்பர பலகைகள் உள்ளிட்ட சொத்துக்களை எந்திரத்தின் மூலம் உடைத்து பெரும் சேதத்தை உருவாக்கி வருகிறார்கள்.

புதுச்சேரி:

புதுவை வர்த்தக சபை தலைவர் குணசேகரன் தலைமையில் நிர்வாகிகள் கலெக்டர் வல்லவனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

புதுவை சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் அதிகாரிகள் சட்டத்துக்கு புறம்பான முறையில் சாலையின் இருபுறமும் உள்ள தற்காலிக கடைகள், சட்டவிரோத பேனர்களை அகற்றாமல் நடைபாதைகளில் இல்லாத போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வணிக நிறுவனங்களின் சுவர்களில் லட்சக்கணக்கில் செலவு செய்து அமைக்கப்பட்ட பெயர் பலகைகள், விளம்பர பலகைகள் உள்ளிட்ட சொத்துக்களை எந்திரத்தின் மூலம் உடைத்து பெரும் சேதத்தை உருவாக்கி வருகிறார்கள்.

அதிகாரிகளின் இத்தகைய தவறான நடவடிக்கைகளை தடுத்திடவும், எதிர்த்துக் கேள்விகள் கேட்போரையும் ஆக்கிரமிப்பு செய்பவர்கள் என்பது போன்ற தவறான தோற்றத்தை ஏற்படுத்த சில அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். இது வணிகர்களுக்கு பெரும் வேதனையை உருவாக்கியுள்ளது.

இதனால், நாள் தோறும் பல நெருக்கடிகளை சந்தித்து அரசுக்கு வரி வருவாய் உருவாக்கித் தரும் வணிகப்பெருமக்கள் மிகுந்த மன உளச்சலுக்கு ஆளாகியுள்ளனர். சில அதிகாரிகளின் தவறான நடவடிக்கை களால் வணிகர்களுக்கு அவப்பெயர் உருவாகும் சூழல் நிலவுகிறது.

இது புதுவையின் தொழில் மற்றும் வணிகத்துக்கு பெரும் பாதிப்பையே ஏற்படுத்தும் எனவே, ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கைகளில் வணிகர்க ளின் கருத்துக்களை அறிந்து, அதன்பின்னர் வழிகாட்டும் நெறிமுறைகளை வகுத்து அதன்படி எவருக்கும் எவ்விதமான பாதிப்புமின்றி ஆக்ரமிப்பு அகற்றும் நடவடிக்கைகளை தொடர்ந்திட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

சந்திப்பின் போது வர்த்தக சபையின் துணைத்தலைவர் எல்.பி.ரவி, இணைப்பொதுச் செயலர் முகம்மது சிராஜ், பொருளாளர் வி.எம்.எஸ். ரவி, குழு உறுப்பினர்கள் தேவகுமார், ஞானசம்பந்தம், நமச்சிவாயம், டி.பி.ராமமூர்த்தி, ஜி.குமார், ராஜவேல், ஜெகதீஷ், ஜெய்கணேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News