புதுச்சேரி

பாராளுமன்ற தேர்தலில் புதுவையில் காங்கிரஸ் வேட்பாளர் தான் போட்டியிடுவார்- நாராயணசாமி உறுதி

Published On 2023-01-04 09:52 IST   |   Update On 2023-01-04 09:52:00 IST
  • பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சியில் நாட்டில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
  • புதுவையை குட்டிச்சுவராக்கும் வேலையை முதலமைச்சர், அமைச்சர்கள், கவர்னர் ஆகியோர் சேர்ந்து கூட்டாக செய்கின்றனர்.

புதுச்சேரி:

புதுவை மாநிலத்தில் காங்கிரஸ் மக்கள் சந்திப்பு யாத்திரை வருகிற 26-ந் தேதி முதல் மார்ச் 25-ந் தேதிவரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் புதுவையில் உள்ள தனியார் மகாலில் நடைபெற்றது. மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

வைத்திலிங்கம் எம்.பி., வைத்தியநாதன் எம்.எல்.ஏ. மற்றும் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் யாத்திரைக்கான புதுவை பொறுப்பாளரும் முன்னாள் எம்.பி.யுமான அனுமந்தராவ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

இதில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

நம்முடைய கூட்டணிக்கு வர தயக்கம் காட்டியவர்கள் எல்லாம் ராகுல் காந்தியை பிரதமராக அறிவித்தால் எங்களுடைய கட்சி ஆதரவு கொடுக்கும் என்று இன்று தானாக வருகின்ற சூழ்நிலையை அவரது பாதயாத்திரை உருவாக்கியுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சியில் நாட்டில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. புதுவை முதலமைச்சர் பா.ஜனதாவுடன் கூட்டணி சேர முக்கிய காரணம் புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறுவதுதான் என்று தேர்தல் நேரத்தில் சொன்னார்.

வாக்குறுதி கொடுத்து 2 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை.

கோப்புகள் தூங்குகின்றன. அதிகாரிகள் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்று ரங்கசாமி புலம்புகிறார். சூப்பர் முதலமைச்சர் கவர்னர் தமிழிசை. டம்மி முதலமைச்சர் ரங்கசாமி. இதுதான் புதுவையின் நிலை சபாநாயகர், உள்துறை அமைச்சர், குடிமைபொருள் வழங்கல் துறை அமைச்சர் பா.ஜனதா தலைவர்கள் உள்பட பல முதலமைச்சர்கள் இந்த ஆட்சியில் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட அலங்கோலமான ஆட்சி புதுவையில் நடக்கிறது. இந்த ஆட்சியில் புதிய திட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை.

புதுவையை குட்டிச்சுவராக்கும் வேலையை முதலமைச்சர், அமைச்சர்கள், கவர்னர் ஆகியோர் சேர்ந்து கூட்டாக செய்கின்றனர்.

இந்த அவலத்தையும் மோடி அரசின் அவலங்களையும் மக்களிடம் கொண்டு செல்ல ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டனும் கடுமையாக உழைக்க வேண்டும்.

2024 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தான் புதுவையில் போட்டியிட வேண்டும் அவரை நாம் அனைவரும் சேர்ந்து வெற்றி பெற செய்ய வேண்டும்

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News