நவீன மீன் அங்காடியில் மீன் வரத்து அதிகரிப்பு
- அசைவ பிரியர்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்
- நவீன மீன் அங்காடியில் நடைபெற்று வருகிறது. ஒரு மாத காலமாக புரட்டாசி என்பதால் பெரும்பாலானோர் அசைவம் சாப்பிடவில்லை.
புதுச்சேரி:
புதுவை நேரு வீதி பெரிய மார்க்கெட்டில் மீன் மார்க்கெட் இயங்கி வருகிறது.
அதன் வெளிப்பகுதியான நேரு வீதி - காந்தி வீதி சந்திப்பில் வெளியூர்களில் இருந்து லாரிகளில் வரும் மீன்கள் இறக்கப்பட்டு காலை நேரத்தில் ஏலம் விடப்படும். சென்னை ஐகோர்ட்டு உத்தரவுபடி நேரு வீதியில் நடந்து வந்த மீன் ஏலம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நவீன மீன் அங்காடிக்கு கடந்த மாதம் 12-ந் தேதி மாற்றப்பட்டது.
அது முதல் மீன் மொத்த விற்பனை மற்றும் சில்லரை விற்பனை நவீன மீன் அங்காடியில் நடைபெற்று வருகிறது. ஒரு மாத காலமாக புரட்டாசி என்பதால் பெரும்பாலானோர் அசைவம் சாப்பிடவில்லை. இதனால் நவீன மீன் அங்காடியில் மீன் வரத்து குறைவாக இருந்தது.
புரட்டாசி மாதம் நேற்றுடன் முடிந்தது. இந்த நிலையில் இன்று புதன்கிழமை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நவீன மீன் அங்காடியில் மீன் வரத்து அதிகமாக இருந்தது. ஏராளமான வியா பாரிகள் குவிந்து மீன்களை வாங்கி சென்றனர். கொடுவா, சங்கரா, வாளை, வஞ்சிரம், வவ்வா, இறால், கனவா போன்ற மீன் வகைகள் அதிகளவில் வந்திருந்தது.
அதே வேளையில் நவீன மீன் அங்காடி அசுத்தமான சூழலில் காணப்படுகிறது. மீன் கழிவு நீர் வெளியேற வாய்ப்பு இல்லாததால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி இருக்கிறது.நவீன மீன் அங்காடியின் ஐஸ் பிளான்ட்டில் தண்ணீர் வெளியேற முடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் நோய் பரவும் அபாயம் இருப்பதாக மீன் வியாபாரிகள் கவலையுடன் தெரிவித்தனர்.