புதுச்சேரி

தாய்மொழியில் வாதாடினால் வழக்குகளில் விரைவில் தீர்வு- கவர்னர் தமிழிசை நம்பிக்கை

Published On 2023-01-19 07:28 GMT   |   Update On 2023-01-19 09:50 GMT
  • புதுவை வக்கீல்களுக்கு அறைகளுடன் கூடிய கட்டிடம் கட்டித்தரும் மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி.
  • நமது பிரதமர் மோடி வழங்கப்படும் நீதி நாட்டின் வளர்ச்சிக்கு, நல்ல சமுதாயம் உருவாக உதவும் என கூறுவார்.

புதுச்சேரி:

புதுவை கடலூர் சாலை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் வக்கீல்கள் சங்கத்திற்கு 105 அறைகளுடன் கூடிய தனி கட்டிடம் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

இதில் கவர்னர் தமிழிசை கலந்துகொண்டு பேசியதாவது:-

புதுவை வக்கீல்களுக்கு அறைகளுடன் கூடிய கட்டிடம் கட்டித்தரும் மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி. இங்கு போதிய டாக்டர்களுடன் கூடிய சிகிச்சை மையம் அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள்.

இதை முதலமைச்சர் செய்து தருவதாக தெரிவித்துள்ளார். அத்துடன் வக்கீல்களுக்கு உடற்பயிற்சி கூடமும் அமைக்கப்பட வேண்டும். யோகா மையமும் அமைக்கப்பட வேண்டும். இவை அமைந்தால் மருத்துவ சிகிச்சை மையமே தேவைப்படாது.

இது நோய்களை தடுக்க முன்னெச்சரிக்கையாக அமையும். நமது பிரதமர் மோடி வழங்கப்படும் நீதி நாட்டின் வளர்ச்சிக்கு, நல்ல சமுதாயம் உருவாக உதவும் என கூறுவார். நல்ல சமுதாயம் உருவாக நீதித்துறையின் பங்கு அவசியம்.

நீதிமன்றங்களில் அந்தந்த தாய்மொழிகளில் வாதாடும்போது வழக்குகளை முடிவுக்கு கொண்டு வருவது எளிதாகும். தமிழில் வாதாடுவது மிகவும் சிறப்பாக இருக்கும் என பலமுறை வலியுறுத்தியுள்ளோம். வரும் காலத்தில் கோர்ட்டில் தாய்மொழியில் வாதாடும் வாய்ப்புகள் உருவாகும். இதற்கான பணிகள் நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News