புதுச்சேரி

புதுவையில் மாணவர்களுக்கு இலவச பஸ்- பள்ளிகளில் மீண்டும் முட்டை

Published On 2022-12-05 09:58 GMT   |   Update On 2022-12-05 10:21 GMT
  • மத்திய சமையல் கூடத்தில் முட்டை அவிக்கப்பட்டு 293 பள்ளிகளில் உள்ள 50 ஆயிரம் மாணவர்களுக்கு ஒரு லட்சம் முட்டை அனுப்பும் பணி இன்று மீண்டும் தொடங்கியது.
  • அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பஸ்களில் இலவச பயணம் செய்யலாம்.

புதுச்சேரி:

புதுவை அரசு கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வாரத்திற்கு 2 முட்டை மதிய உணவில் வழங்கப்பட்டு வந்தது.

கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு மதிய உணவுக்கு பதிலாக அரிசியும், பணமும் வழங்கப்பட்டது. கொரோனாவுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால் முட்டை வழங்கப்படவில்லை.

இதனிடையே பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை அக்சயா என்ற தன்னார்வ நிறுவனம் ஏற்றுக்கொண்டது. இந்த தன்னார்வ நிறுவனம் சைவ உணவை மட்டும்தான் வழங்கி வருகிறது. இதனால் மாணவர்களுக்கு முட்டை கிடைக்கவில்லை. அதேநேரத்தில் பள்ளி மாணவர்களுக்கு முட்டையுடன் மதிய உணவு வழங்க அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர்.

இதையடுத்து இன்று முதல் மாணவர்களுக்கு பள்ளிகளில் முட்டை வழங்கப்பட்டது. மத்திய சமையல் கூடத்தில் முட்டை அவிக்கப்பட்டு 293 பள்ளிகளில் உள்ள 50 ஆயிரம் மாணவர்களுக்கு ஒரு லட்சம் முட்டை அனுப்பும் பணி இன்று மீண்டும் தொடங்கியது.

இதற்கான பணியை பள்ளி கல்வித்துறை துணை இயக்குனர் கொஞ்சிமொழி குமரன் நேரில் பார்வையிட்டு அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

வாரத்தில் 2 நாட்கள் முட்டை வழங்கப்படுகிறது. முதல் நாள் 147 பள்ளி மாணவர்களுக்கும் அடுத்து 146 பள்ளி மாணவர்களுக்கும் என சுழற்சி முறையில் கொடுக்கப்பட உள்ளது.

இதேபோல கொரோனா முடிவுற்று பள்ளி தொடங்கிய பிறகு மாணவர்களுக்கு இயக்கப்படும் ஒரு ரூபாய் கட்டண பஸ் இயக்கப்படவில்லை. இதனால் பள்ளி மாணவர்கள் கட்டணம் செலுத்தி பள்ளி, கல்லூரிக்கு சென்று வந்தனர். பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும் என அரசியல் கட்சிகள், இயக்கங்கள் வலியுறுத்தி வந்தன.

இதையடுத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டணமின்றி இலவச பஸ் இயக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார். இதன்படி இன்று முதல் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் இயக்கப்படுகிறது.

இந்த இலவச பஸ் சேவையை பிற்பகலில் கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார். அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பஸ்களில் இலவச பயணம் செய்யலாம்.

நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், சாய்.ஜெ.சரவணன்குமார் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News