புதுச்சேரி

சட்டசபையை முற்றுகையிட்ட நரிக்குறவர்கள்

குழந்தைகளுடன் சட்டசபையை முற்றுகையிட்ட நரிக்குறவர்கள்

Published On 2023-08-30 14:14 IST   |   Update On 2023-08-30 14:14:00 IST
  • போலீசாருடன் வாக்குவாதம்
  • போலீசார் அங்கு நிற்கக்கூடாது பாரதிபூங்கா உள்ளே சென்று காத்திருக்கும்படி தெரிவித்தனர்.

புதுச்சேரி:

புதுவை திருபுவனை தொகுதி மதகடிப்பட்டில் தனியார் சோப்பு நிறுவனத்தின் பின்புறம் உள்ள திடலில் நரிக்குறவர்கள் வசித்து வருகின்றனர்.

சுமார் 30 ஆண்டுக்கும் மேலாக வசித்து வரும் இவர்களுக்கு மனைப்பட்டா வழங்குவதாக அரசு அறிவித்திருந்தது. தேர்தலின்போதும் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் மனைப்பட்டா வழங்கவில்லை. இன்று காலை 12 மணியளவில் நரிக்குறவர்கள் தங்கள் குழந்தைகளோடும், கைகளில் வெற்று கேண்களுடனும் சட்டசபை வளாகத்தின் முன்பு வந்தனர்.

இதைக்கண்ட சட்டசபை காவலர்கள், போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் நரிக்குறவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 30 ஆண்டுக்கும்மேல் வசித்து வரும் தங்களுக்கு வாக்குறுதி அளித்தபடி மனைப்பட்டா வழங்கவில்லை. வெயிலிலும், மழையிலும் அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்பட்டு வருகிறோம்.

முதல்-அமைச்சரை சந்திக்க எங்களை அனுமதிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். முதல்-அமைச்சர் சட்டசபையில் இல்லை. அவர் வந்தவுடன் அனுமதிபெற்று உள்ளே அனுமதிப்பதாக தெரிவித்தனர். நரிக்குறவர்கள் முதல்- அமைச்சர் வரும் வரை நிற்பதாகக்கூறி பாரதிபூங்கா நுழைவுவாயிலில் காத்திருந்தனர். போலீசார் அங்கு நிற்கக்கூடாது பாரதிபூங்கா உள்ளே சென்று காத்திருக்கும்படி தெரிவித்தனர்.

அவர்கள் மறுப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்ததால் 10 நிமிடம் பரபரப்பு நிலவியது. போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி பூங்காவிற்குள் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் முதல்-அமைச்சர் வருகைக்காக காத்திருந்தனர். 

Tags:    

Similar News