சொர்ணாவூர் அணைக்கட்டில் தண்ணீர் நிரம்பி வழியும் காட்சி.
தென்பெண்ணை ஆற்றில் வெள்ள பெருக்கு
- தென்பெண்ணை ஆற்றில் வந்து உள்ள நீர் சாத்தனூர் அணைக்கட்டை நிரப்பி 2 ஆயிரம் கன அடி வெளியேற்றப்பட்டு.
- அணையில் இருந்து சுமார் 5600 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.
புதுச்சேரி:
கர்நாடக மாநிலத்தில் பெய்த கன மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள அணையில் இருந்து சுமார் 5600 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.
இந்த நீர் கிருஷ்ணகிரி அணையை வந்தடைந்து உள்ளது. இவ்வணை நிரம்பி யதால் சுமார் 2500கன அடி நீர் வெளியேற்றி வருகின்றனர். தென்பெண்ணை ஆற்றில் வந்து உள்ள நீர் சாத்தனூர் அணைக்கட்டை நிரப்பி 2 ஆயிரம் கன அடி வெளியேற்றப்பட்டு திருக்கோயிலூர், விழுப்புரம் வழியாக நேற்று மாலை புதுவை பராமரிப்பில் உள்ள சொர்ணாவூர் அணைக் கட்டுக்கு சுமார் 1500கன அடிநீர் வந்தடைந்தது.
தற்பொழுது சொர்ணாவூர் அணைகட்டு நிரம்பி வழிந்து ஆற்றில் இருபுறமும் கரைபுரண்டு 1 மீட்டர் உயரத்திற்கு ஓடுகிறது.
இந்த நீர் குருவிநத்தம் சித்தேரி அணைக்கட்டை இன்று மாலை அல்லது இரவு வந்தடையும். சொர்ணாவூர் அணைக்கட்டில் இருந்து பங்காரு வாய்க்கால் பகுதிக்கு மூலமாக பாகூர் ஏரிக்கு நீர் கொண்டு வர பொதுப்பணித்துறை அதிகாரிகள் மதகுகளை திறந்து உள்ளனர்.
அதன் வழியாக சுமார் 50 செமீ. உயரத்திற்கு தண்ணீர் வாய்க்காலில் ஓடுகிறது.
ஆறு வற்றியிருந்த நிலையில் ஓரே மாதத்தில் 2-வது முறையாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகளும், பொது மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில் அச்சத்திலும் உள்ளனர். அணைக்கட்டுகளை புதுவை பொதுப்பணித்துறை ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.