புதுவை கடற்கரை சாலையில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மரியாதை செலுத்திய காட்சி.
வீடுதோறும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும்-கவர்னர் தமிழிசை நம்பிக்கை
- புதுவை அரசின் செய்தி விளம்பரத்துறை சார்பில் கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டது.
- கடற்கரை சாலை போர்வீரர் நினைவிடத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள், முப்படையினர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
புதுச்சேரி:
புதுவை அரசின் செய்தி விளம்பரத்துறை சார்பில் கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டது.
கடற்கரை சாலை போர்வீரர் நினைவிடத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள், முப்படையினர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
தொடர்ந்து கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சந்திர பிரியங்கா, சாய்.ஜெ. சரவணன்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், பாஸ்கர், கே.எஸ்.பி. ரமேஷ், அசோக்பாபு, தலைமை செயலர் ராஜீவ் வர்மா, டி.ஜி.பி. மனோஜ்குமார் லால் ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-
புதிய குடியரசுத் தலைவருக்கு என் வாழ்த்துக்கள். இந்தியாவில் மிகப்பெரிய சமூக புரட்சி ஏற்பட்டுள்ளது. அடித்தட்டு மக்களுக்காக சேவை செய்து வரும் ஒரு தலைவர், குடியரசு தலைவராக பரிமளிக்க முடியும் என்பதுதான் இந்திய குடியரசின் மாண்பு. இதை நடத்தி காட்டிய பிரதமருக்கு நன்றி.
குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அடித்தட்டில் மிகவும் பின்தங்கிய கிராமங்களில் படித்துக் கொண்டிருக்கிற குழந்தைகளுக்கு கூட மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்.
இன்று கார்கில் வெற்றி தினம். அனைத்து ராணுவ வீரர்களையும் பாராட்டி வெற்றியை கொண்டாட வேண்டும். மூவர்ண தேசியக்கொடி குழந்தைகள் மனதில், இளைஞர்கள் மனதில் பதிய வேண்டும் என்பதற்காக இல்லந்தோறும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதை மாநில அரசு நடைமுறை படுத்தி வருகிறது. வீடுதோறும் ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி ஏற்றப்படவேண்டும்.
ஆகஸ்டு 13 முதல் 15-ந் தேதி வரை இயக்கமாகவே முன்னெடுத்துச் செல்கிறோம். இல்லம் தோறும் தேசிய கொடி இளைஞர்கள் மத்தியில் நல்ல எழுச்சியை ஏற்படுத்தும். அனைவரிடத்திலும் தேசிய உணர்வை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.