புதுச்சேரி

புதுச்சேரி அரசு பள்ளிகளில் மாலை சிற்றுண்டி திட்டம் 14-ந் தேதி தொடங்குகிறது

Published On 2024-02-09 05:11 GMT   |   Update On 2024-02-09 05:11 GMT
  • திட்டத்தை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைக்கிறார்.
  • வாரத்தில் ஏதேனும் 2 நாட்கள் மாலையில் சிறுதானியங்களால் செய்யப்பட்ட பிஸ்கெட் அல்லது கேக் வழங்கப்படும்.

புதுச்சேரி:

புதுச்சேரி அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு மாலையில் சிற்றுண்டி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

வருகிற 14-ந் தேதி இந்த திட்டத்தை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைக்கிறார்.

இது சம்பந்தமாக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுச்சேரியில் அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு புத்தகம், சீருடை ஆகியவற்றை வழங்குகிறோம். நின்றுபோன இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தையும் தற்போது தொடங்கியுள்ளோம்.

பிரதமர் இந்த ஆண்டை சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளார்.

அதன்படி பள்ளி மாணவர்களுக்கு சிறுதானிய உணவினை வழங்க உள்ளோம். மாலையில் சிறுதானிய சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை வருகிற 14-ந் தேதி தொடங்க உள்ளோம்.

இந்த திட்டத்தை காட்டேரிக் குப்பம் அரசுப்பள்ளியில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் தொடங்கி வைக்க உள்ளனர்.

இந்த திட்டத்தின்படி வாரத்தில் ஏதேனும் 2 நாட்கள் மாலையில் சிறுதானியங்களால் செய்யப்பட்ட பிஸ்கெட் அல்லது கேக் வழங்கப்படும்.

சுமார் 20 கிராம் எடையில் இருக்கும். பள்ளிக்கூடம் முடிந்து மாணவ-மாணவிகள் வீடுகளுக்கு செல்லும்போது சிறுதானிய சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது.

இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் எல்.கே.ஜி. முதல் 12-ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் சுமார் 84 ஆயிரம் மாணவ-மாணவிகள் பயன்பெறுவர். இதன்மூலம் 4 மாதத்துக்கு அரசுக்கு ரூ.90 லட்சம் கூடுதல் செலவாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News