புதுச்சேரி

மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை முன்னாள் அதிகாரியிடம் ரூ.15 லட்சம் மோசடி- சைபர் கிரைம் போலீசார் விசாரணை

Update: 2023-02-04 09:35 GMT
  • உலக நாதன் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையில் அதிகாரியாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.
  • உலகநாதன் குறிப்பிட்ட அந்த செயலி மூலம் பிட்காயினில் ரூ.15 லட்சத்தை முதலீடு செய்தார்.

புதுச்சேரி:

புதுவை கோரிமேடு பூபாலன் நகரை சேர்ந்தவர் உலக நாதன் (வயது 49). மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையில் அதிகாரியாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.

தற்போது புதுவையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். உலகநாதன் பிட்காயினில் முதலீடு செய்ய விரும்பினார். அதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன் இணைய தள செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்தார். அதில் இருந்த செல்போன் எண்ணில் உலக நாதன் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது எதிர்முனையில் பேசிய நபர் தன்னை ஆன்லைன் வர்த்தக மேலாளர் மனோஜ் என்றும், பிட்காயினில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெற முடியும், இதில் முதலீடு செய்த பலர் கோடி கோடியாக சம்பாதித்துள்ளனர் என்று ஆசை வார்த்தைகளை அள்ளிவிட்டார்.

இதனை உண்மை என்று நம்பிய, உலகநாதன் குறிப்பிட்ட அந்த செயலி மூலம் பிட்காயினில் ரூ.15 லட்சத்தை முதலீடு செய்தார். அடுத்த சில நாட்களில் அந்த செயலியின் அனைத்து இணைப்புகளும் துண்டிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த உலகநாதன், மனோஜை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த உலகநாதன், இதுகுறித்து புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து, மோசடி நபர் குறித்து விசாரித்து வருகிறார்.

Tags:    

Similar News