கோப்பு படம்.
- புதுவையில் 2021 சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
- இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
புதுச்சேரி:
புதுவையில் 2021 சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
தேர்தலுக்கு பின் தமிழகத்தில் அ.தி.மு.க. எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றது. புதுவையில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் யாரும் வெற்றி பெறவில்லை. இருப்பினும் அ.தி.மு.க. கூட்டணியான என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
அ.தி.மு.க. கட்சிக்குள் நிலவிய குழப்பம் காரணமாக முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற ரங்கசாமி அ.தி.மு.க. கட்சித் தலைவர்களை சந்திக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இந்த தேர்வு செல்லும் என ஐகோர்ட்டும் தீர்ப்பளித்தது. இதையடுத்து அ.தி.மு.க.வினர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இன்று காலை 9 மணிக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி போன் மூலம் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டார். அப்போது, அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக பதவி ஏற்றதற்கு தனது வாழ்த்துக்களை ரங்கசாமி தெரிவித்தார்.