புதுச்சேரி

பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் நிருபர்களுக்கு பேட்டி அளித்த காட்சி. அருகில் வெங்கடேசன் எம்.எல்.ஏ. , முன்னாள் எம்.எல்.ஏ.தங்க விக்ரமன் உள்ளனர்.

புதுவை மாநில பா.ஜனதா சார்பில் சேவை மாதமாக கொண்டாட்டம்

Published On 2023-09-13 14:15 IST   |   Update On 2023-09-13 14:15:00 IST
  • 50 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் ஊழலும், வறுமையும்தான் நாட்டில் மலிந்திருந்தது.
  • இதற்காக பிரதமருக்கு எங்கள் பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

புதுச்சேரி:

புதுவை மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

50 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் ஊழலும், வறுமையும்தான் நாட்டில் மலிந்திருந்தது. ஆனால் இன்று பிரதமராக மோடி பொறுப்பேற்ற பிறகு நாடு பல்வேறு வளர்ச்சிகளை கண்டுள்ளது. ஜி-20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி உலகளவில் நாட்டின் பெருமையை பிரதமர் பறைசாற்றியுள்ளார். இதற்காக பிரதமருக்கு எங்கள் பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

புதுவை மாநில பா.ஜனதா சார்பில் பாராட்டு கடிதம் பிரதம ருக்கு அனுப்பியுள்ளோம். நாடு முழுவதும் பிரதமர் மோடியின் பிறந்தநாளை செப்டம்பர் 17-ந் தேதி முதல் அக்டோபர் 2-ந் தேதி வரை சேவை மாதமாக கொண்டாட உள்ளோம்.

பிறந்தநாளையொட்டி தொகுதி தோறும் மருத்துவ முகாம்களை நடத்துகிறோம். மரக்கன்றுகள் நடுகிறோம். வரும் திங்கள் கிழமை ஒரே நாளில் நாடு முழுவதும் அதிகளவில் ரத்ததானம் செய்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறும் நிகழ்ச்சி நடக்கிறது.

புதுவை மாநில பா.ஜனதா சார்பில் ஜிப்மரில் இளைஞர்கள் ரத்ததானம் செய்கின்றனர். ஆயுஷ்மான் திட்டத்தில் ஒரு லட்சத்து 38 ஆயிரம் பேர் புதுவையில் இணைந்துள்ளனர். விடுபட்டவர்களையும் இத்திட்டத்தின் கீழ் இணைக்க உள்ளோம். இதற்காக தொகுதிதோறும் முகாம்கள் நடத்தப்படும். உஜ்வாலா திட்டத்தின் கீழ் 75 லட்சம் புதிய கியாஸ் இணைப்புகளை நாடு முழுவதும் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

புதுவையில் 15 ஆயிரம் பேர் இத்திட்டத்தின் கீழ் இணைக்கப்படுவார்கள். இதற்காக தொகுதிதோறும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அக்டோபர் 2-ம் தேதி காவி பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். அன்றைய தினம் பா.ஜனதா வினர் காவி ஆடைகள் அணிந்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்து வார்கள்.

இஸ்ரோ விஞ்ஞானி களை பாராட்டும்விதமாக தொகுதிதோறும் வினாடி வினா போட்டிகள் நடத்த உள்ளோம். பா.ஜனதா அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உறுப்பு தானத்தை வலியுறுத்த உள்ளோம். முடநீக்கு உபகரணங்களையும் வழங்க உள்ளோம்.

நாடு முழுவதும் மத்திய பல்கலைக்கழகங்களில் அந்தந்த மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு 25 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட வில்லை. இதற்காக புதுவை பல்கலைக்கழகத்திலும் சட்டம் இயற்ற வேண்டும். இந்த சட்டத்தை இயற்றி புதுவை மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

புதுவையில் பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க அனைத்து அரசியல்கட்சி களும் இணைந்து ஒரு முடிவு எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News