கோப்பு படம்.
பெண் தீக்குளித்து இறந்த சம்பவத்தில் சி.சி.டி.வி. பதிவு மாயம்
- புதுவை பிள்ளைச்சாவடி சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் மீனவர் சந்திரன்.
- போலீசாரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.
புதுச்சேரி:
புதுவை பிள்ளைச்சாவடி சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் மீனவர் சந்திரன். இவரது மனைவி கலைச்செல்வி. கடந்த 27-ந் தேதி காலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் கலைச்செல்வி தீக்குளித்து தற்கொலை செய்தார்.
கடன் தொகை வசூலிப்பது தொடர்பான பிரச்சினையில் போலீசார் ஒருதலைபட்சமாக செயல்பட்டதால் கலைச்செல்வி தற்கொலை செய்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து சந்திரனிடம் கடன் வாங்கிய ஏழுமலை கைது செய்யப்பட்டார். காலாப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ, உதவி சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். கலைச்செல்வி குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் வழங்கவும், கலெக்டர் விசாரணைக்கும் முதல்- அமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டார்.
மேலும் இந்த சம்பவத்தில் சப்-கலெக்டர் கந்தசாமி கடந்த 30-ந் தேதி விசாரணையை தொடங்கினார். கலைச்செல்வியின் கணவர், குடும்பத்தினர், பணியில் இருந்த போலீசாரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.
ஆனால் போலீஸ் நிலைய ஜி.டி. புத்தகம், சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் விசாரணைக்கு ஒப்படைக்க வில்லை. சி.சி.டி.வி. பதிவு மாயமாகி உள்ளது. மற்ற விசாரணைகளை முடித்த சப்கலெக்டர் சந்தசாமி அறிக்கையாக ஓரிருநாட்களில் அரசுக்கு சமர்பிக்க உள்ளார்.இதனிடையே இறந்த பெண்ணின் உறவினர்கள் தேசிய மனித உரிமை ஆணையம், தேசிய மகளீர் ஆணையத்திடம் புகார் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.