கோப்பு படம்.
வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி
- வீட்டுக்குள் புகுந்து அங்கு அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த புவனேஸ்வரியின் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் செயினை பறிக்க முயன்றார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
அரியாங்குப்பத்தில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
அரியாங்குப்பம் தேங்காய்திட்டு வீதியை சேர்ந்தவர் ஏழுமலை இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 34) இவர் அரியாங்குப்பம் மார்கெட் பகுதியில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
நேற்று இரவு புவனேஸ்வரி தனது குழந்தைகள் மற்றும் மாமியாருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை 4 மணியளவில் ஒரு மர்ம நபர் வீட்டுக்குள் புகுந்து அங்கு அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த புவனேஸ்வரியின் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் செயினை பறிக்க முயன்றார்.
இதனால் திடுக்கிட்டு எழுந்த புவனேஸ்வரி திருடன் திருடன் என அலறிய போது புவனேஸ்வ ரியை கீழே தள்ளி விட்டு அந்த மர்ம நபர் தப்பி ஓடி விட்டார். இது குறித்து புவனேஸ்வரி அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா க்களை ஆய்வு செய்து செயினை பறிக்க முயன்ற மர்ம நபரை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.