புதுச்சேரி

சேதராப்பட்டு தனியார் தொழிற்சாலையில் கணவருடன் தர்ணாவில் ஈடுபட்ட பெண்.

கணவருடன் தர்ணாவில் ஈடுபட்ட பெண்

Published On 2022-10-11 08:20 GMT   |   Update On 2022-10-11 08:20 GMT
  • சேதராபட்டியில் உள்ள வெல்டிங் ராடு தயாரிக்கும் கம்பெனி தொடங்கும் பொழுது மெஷின் ஆபரேட்டராக பணியில் சேர்ந்தார்.
  • தொடர்ந்து அந்த கம்பெனியில் பணியாற்றிய அவருக்கு அங்குள்ள எந்திரத்தில் இருந்து வெளியாகும் நச்சுப் புகையால் இவரது நுரையீரல் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

புதுச்சேரி:

வில்லியனூரை அடுத்த ராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மண்ணாங்கட்டி (வயது 58). இவர் சேதராபட்டியில் உள்ள வெல்டிங் ராடு தயாரிக்கும் கம்பெனி தொடங்கும் பொழுது மெஷின் ஆபரேட்டராக பணியில் சேர்ந்தார்.

தொடர்ந்து அந்த கம்பெனியில் பணியாற்றிய அவருக்கு அங்குள்ள எந்திரத்தில் இருந்து வெளியாகும் நச்சுப் புகையால் இவரது நுரையீரல் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இவர் கடந்த ஆண்டு முதல் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவருக்கு உடல்நிலை சரியில்லாததை கருத்தில் கொண்டு அந்த தனியார் கம்பெனி நிர்வாகம் திடீரென அவரை வேலையில் இருந்து அனுப்பியது. 20 ஆண்டுகளுக்கு மேலாக அந்த கம்பெனியில் வேலை செய்து வந்த மண்ணாங்கட்டிக்கு, கம்பெனி நிர்வாகம் எந்த விதமான தொகை வழங்கவில்லை என தெரிகிறது.

மண்ணாங்கட்டியின் மனைவி பிரேமாராணி கடந்த 6 மாதங்களாக கணவருக்கு கொடுக்க வேண்டிய தொகையை தரவேண்டியும், 20 ஆண்டு களாக அவர் கம்பெனியில் பணியாற்றியமைக்காகவும் மேலும் இ.எஸ்.ஐ மற்றும் பி.எப் தொகையினை பெற்று தர கூறியும் கம்பெனி நிர்வாகத்தை அணுகி உள்ளனர்.

ஆனால் கம்பெனி நிர்வாகம் அதற்கு செவி சாய்க்கவில்லை. இந்நிலை யில் மண்ணாங்கட்டி, இவரது மனைவி பிரேமாராணி மற்றும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று காலை சேதராப்பட்டியில் உள்ள கம்பெனிக்கு வந்தனர்.

கம்பெனியின் வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது மண்ணாங்கட்டி மனைவி பிரேமாராணி, இந்த கம்பெனிக்காக இரவும் பகலும் உழைத்த எனது கணவர் மண்ணாங்கட்டிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருந்து மாத்திரைகள் வாங்க கூட பணம் இல்லாமல் நடுவீதிக்கு வந்துள்ளோம். என் கணவருக்கு சேர வேண்டிய பணத்தை நிர்வாகம் கொடுக்காவிட்டால் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்வதாக கூறினார்.

தகவல் இருந்து சம்பவ இடத்திற்கு சேதராப்பட்டு போலீசார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட தம்பதியினரையும் அவர்க ளது உறவினர்களையும் சமாதானப்படுத்தினர். இதற்கு முடிவு தெரியாமல் போக மாட்டோம் எனக் கூறி அங்கேயே உறவினர்கள் முற்றுகையிட்டு வருகின்ற னர். இந்த சம்பவத்தால் சேதராப்பட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News