புதுச்சேரி

மோட்டார் சைக்கிளை திருடிய கடலூர் வாலிபரையும் அவரை பிடித்த போலீசாரையும் படத்தில் காணலாம்.

28 மோட்டார் சைக்கிள்களை திருடிய வாலிபர்

Published On 2022-08-13 09:28 GMT   |   Update On 2022-08-13 09:28 GMT
  • புதுவையில் 28 மோட்டார் சைக்கிள்களை திருடிய கடலூர் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
  • புதுவையில் சமீப காலமாக தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போகும் சம்பவங்கள் நடந்துவருகிறது.

புதுச்சேரி:

புதுவையில் 28 மோட்டார் சைக்கிள்களை திருடிய கடலூர் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

புதுவையில் சமீப காலமாக தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போகும் சம்பவங்கள் நடந்துவருகிறது. ஒரு நாளைக்கு 2-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் திருடு போகின்றன. இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டாலும் இதனை முற்றிலும் தடுக்க முடியாமல் போலீசார் திண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் சுதந்திர தினத்தையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா உத்தரவின் பேரில் நேற்று இரவு புதுவை முழுவதும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அதுபோல் ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் தலைமையில் குற்றப்பிரிவு போலீசார் புதுவை காந்தி வீதி-சின்னவாய்க்கால் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை தடுத்து நிறுத்தினர்.

அந்த மோட்டார் சைக்கிளில் முன்பக்கத்தில் நம்பர் பிளேட் இல்லாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் கடலூர் சி.என்.பாளையத்தை அடுத்த கிடையார்குப்பத்தை சேர்ந்த சவுந்திரராஜன்(வயது25) என்பது தெரியவந்தது. பின்னர் அந்த மோட்டார் சைக்கிளை பின் பக்கத்தில் இருந்து நம்பர் பிளேட்டை வைத்து விசாரணை நடத்திய போது அந்த வாகனம் புதுவை பதிவு எண் கொண்டதாக இருந்தது. இதனை தொடர்ந்து அந்த வாகனத்தை ஓட்டி வந்த வாலிபரிடம் போலீசார் கிடுக்கிபிடி விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர் அந்த வாகனத்தை புதுவை அண்ணா சாலையில் மதுக்கடை எதிரே திருடி வந்ததை ஒப்புக்கொண்டார். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் இதுபோல் புதுவையில் 27 வாகனங்களை திருடியதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். இதையடுத்து சவுந்தரராஜனை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து திருடிய 28 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News