புதுச்சேரி

கோப்பு படம்.

தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு ஆட்சிமன்ற குழு நியமிக்க வேண்டும்

Published On 2023-09-01 08:14 GMT   |   Update On 2023-09-01 08:14 GMT
  • முன்னாள் எம்.பி. ராமதாஸ் வலியுறுத்தல்
  • பல்கலைக்கழக சட்டத்தின் படி பல்கலைக்கழகம் ஆரம்பித்த உடனே அதற்கான ஆட்சி மன்றக்குழுவை கவர்னர் அமைத்திருக்க வேண்டும்.

புதுச்சேரி:

புதுவை முன்னாள் எம்.பி. ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவை தொழில்நுட்பப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் பணிகளை புறக்கணித்து அடையாள உண்ணாவிரதம் இருந்திருப்பது வருத்தத்திற்குரியது. அவர்களை இந்த நிலைக்கு தள்ளியது புதுவை அரசுதான்.

இந்தப் பல்கலைக்கழகம் புதுவையின் முதல் பல்கலைக்கழகம். இதை கண்ணும் கருத்தோடும் வளர்த்து ஒரு தரமான பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டியது அரசின் தலையாய கடமை. பல்கலைக்கழகமாக மாற்றிய பிறகும் அதை ஒரு கல்லூரியாகவே நடத்துவது முறையற்ற செயலாகும். பல்கலைக்கழக சட்டத்தின் படி பல்கலைக்கழகம் ஆரம்பித்த உடனே அதற்கான ஆட்சி மன்றக்குழுவை கவர்னர் அமைத்திருக்க வேண்டும்.

3 ½ ஆண்டுக்கு பிறகும் ஆட்சி மன்றக்குழுவை நியமிக்காதது அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறிய ஒரு செயல். ஆட்சிமன்ற குழு இல்லாமல் பல்கலைக்கழகம் ஒரு கல்லூரியாகத்தான் திகழும். எந்த வளர்ச்சியும் ஏற்படாது. தொழில்நுட்பக் கல்வியின் தரம் உயராது. அதனால்தான் தேசிய தரவரிசையில் கல்லூரியாக இருந்தபோது 34-வது இடத்தில் இருந்த நிறுவனம், பல்கலைக்கழகமாக மாறிய பிறகு 200-வது வரிசைக்கு கீழே தள்ளப்பட்டுள்ளது.

முதல் தர பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில்தான் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் தங்களது போராட்டங்களை கையில் எடுத்துள்ளனர். இதை உணர்ந்து புதுவை அரசு பல்கலைக்கழகத்திற்கு ஒரு நல்ல திறமையான அனுபவம் வாய்ந்த பதிவாளரை நியமிப்பதோடு, ஆட்சிமன்றக் குழுவையும் உடனடியாக துணைவேந்தர் தலைமையில் நியமித்து ஆணை பிறப்பிக்க வேண்டும்.

தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தை சரியான பாதையில் செயல்படுத்த வைக்க வேண்டியது கவர்னர், முதல்-அமைச்சரின் கடமை.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News