புதுச்சேரி

கோப்பு படம்.

10-சதவீத இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே நடைமுறைபடுத்த வேண்டும்

Published On 2023-07-19 06:41 GMT   |   Update On 2023-07-19 06:41 GMT
  • மாணவர்-பெற்றோர் நல சங்கம் வலியுறுத்தல்
  • புதிய சட்டத்தையோ அல்லது சட்ட திருத்தத்தையோ கொண்டு வந்தால், மத்திய அரசின் ஒப்புதலை பெறவேண்டும்

புதுச்சேரி:

புதுவை மாநில மாணவர் மற்றும் பெற்றோர் நல சங்க தலைவர் ராஜ்பவன் வை.பாலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மருத்துவ படிப்பில் புதுவை அரசு பள்ளி மாணவர்களுக்கு 10-சதவீத இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த கவர்னர் நடவடிக்கை எடுத்து வருவது வரவேற்கத்தக்கது.

ஏற்கனவே புதுவை அரசு இது சம்பந்தமான கோப்பினை தயார் செய்து ஆளுநருக்கு சமர்பித்துள்ள நிலையில், புதுவை மாநிலம் யூனியன் பிரதேசம் என்பதாலும், மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் நேரடி பார்வையின் கீழ் செயல்படுவதாலும், எந்தவொரு புதிய சட்டத்தையோ அல்லது சட்ட திருத்தத்தையோ கொண்டு வந்தால், மத்திய அரசின் ஒப்புதலை பெறவேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த கல்வி ஆண்டே (2023-2024) மேற்படி 10 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வியில் ஒதுக்கப்பட்டால் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் 3 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடாக பெறப்பட்ட 370 இளநிலை மருத்துவ (எம்.பி.பி.எஸ்) இடங்களில் 37 இளநிலை மருத்துவ (எம்.பி.பி.எஸ்) இடங்களை அரசு பள்ளி மாணவர்கள் இடம் பெற வாய்ப்புகிட்டும்.

இதே போல் 138 இளநிலை மருத்துவ(பி.டி.எஸ்) இடங்களில் 14 இளநிலை மருத்துவ (பி.டி.எஸ்) இடங்களை அரசு பள்ளி மாணவர்கள் இடம் பெற வாய்ப்பு கிட்டும். தற்போது இது சம்மந்தமான கோப்பை சுகாதாரத்துறை தயார் செய்து புதுவை அரசு அமைச்சரவை ஒப்புதலை பெற்று சட்டத்துறை, மற்றும் நிதித்துறை, ஒப்புதலைப் பெற வேண்டும்.

ஆளுநரிடம் மேற்படி கோப்பினை கையொப்பம் பெற்று அதனை புதுவை அரசு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி அதன் பரிந்துரையைப் பெற்று 10 சதவீத இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே பெற்று தர வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News