வழிபாடு
வடபழனி முருகன் கோவிலில் இன்று காலையிலேயே பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு திரண்டனர்

பங்குனி உத்திரம்: திருத்தணி-வடபழனி முருகன் கோவில்களில் பக்தர்கள் வெள்ளம்

Published On 2022-03-18 12:39 IST   |   Update On 2022-03-18 12:39:00 IST
பங்குனி உத்திரமான இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் பக்தர்கள் திரளாக திரண்டு பங்குனி உத்திர விழாவை கொண்டாடினார்கள்.
குலதெய்வ வழிபாட்டுக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படும் பங்குனி உத்திர விழா இன்று தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

பங்குனி உத்திரம் அன்று முருகனை மனமுருகி வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது இந்துக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

இதைத் தொடர்ந்து பங்குனி உத்திர நாளில் முருகன் கோவில்களில் பக்தர்கள் அதிகளவில் திரண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கமாக உள்ளது.

இதன்படி பங்குனி உத்திரமான இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் பக்தர்கள் திரளாக திரண்டு பங்குனி உத்திர விழாவை கொண்டாடினார்கள்.

பெரிய கோவில்கள் முதல் சிறிய கோவில்கள் வரை அனைத்து முருகன் ஆலயங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அதிகாலையிலேயே பக்தர்கள் கோவிலுக்கு சென்று முருகனை தரிசித்தனர். குறிப்பாக பெண்கள் கூட்டம் முருகன் கோவில்களில் அதிகமாகவே காணப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு இன்று காலையிலேயே நடை திறக்கப்பட்டு முருகனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு தரிசனம் செய்தனர். பக்தர்கள் பலர் பால் குடம் மற்றும் மயில் காவடி எடுத்து வந்திருந்தனர். பெண்கள் பால் குடங்களை சுமந்து வந்து முருகனை மனமுருகி வழிபட்டனர்.

சென்னை வடபழனி முருகன் கோவிலில் இன்று காலையிலேயே பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு திரண்டனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்படி ஆண், பெண் பக்தர்கள் கோவிலுக்கு வெளியே உள்ள சாலைகளில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து முருகனை வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து வந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

வடபழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் கோவிலுக்கு வெளியே போடப்பட்டிருந்த கடைகளில் பூக்கள், பழங்கள் விற்பனையும் அதிகரித்து காணப்பட்டது. இதனால் சிறிய கடைகளை வைத்திருந்த வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

செங்குன்றத்தை அடுத்துள்ள சிறுவாபுரி முருகன் கோவில் இயற்கை எழில் சூழ்ந்து காணப்படும் கோவி லாகும். சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் சிறுவாபுரி முருகனை தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் அதிகளவில் வருகை தந்து கொண்டிருக்கின்றனர். பங்குனி உத்திர திருநாளை யொட்டி, இந்த கோவிலிலும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இந்த கோவிலின் முன்பு உள்ள கடைகளில் அப்பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகளை வைத்து வியாபாரிகள் விற்பனை செய்வார்கள். இதனை பக்தர்கள் அதிகளவில் வாங்கி செல்வது வழக்கம். இன்றும் அது போன்று விற்பனை சூடு பிடித்திருந்தது.

சென்னையில் உள்ள கந்தகோட்ட முருகன் கோவிலிலும் இன்று பக்தர்கள் அதிகளவில் திரண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சென்னை ஐஸ்அவுஸ் எட்டாம்படை முருகன் கோவிலில் பெண்கள் புஷ்ப காவடி எடுத்து வந்திருந்தனர். நூற்றுக்கணக்கான சிறுவர்- சிறுமிகள் முருகன் காவடி எடுத்து ஆட்டம் போட்ட படியே வந்திருந்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

பிரசித்தி பெற்ற குன்றத்தூர் முருகன் கோவிலில் இன்று காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இரவு 9 மணி வரை சாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த கோவிலுக்கு வந்திருந்த பொதுமக்கள் பலர் ஆங்காங்கே அன்னதானமும் வழங்கினார்கள்.

வல்லக்கோட்டை சுப்பிரமணியசாமி கோவிலில் முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இந்த கோவிலுக்கு பக்தர்கள் காவடி எடுத்து வந்திருந்தனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் இன்று சாமி தரிசனம் செய்தனர். வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வந்திருந்தனர்.

இதே போன்று திருப்போரூர் முருகன் கோவிலிலும் பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர். மாமல்லபுரம், செங்கல்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமானோர் திருப்போரூர் முருகன் கோவிலுக்கு வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

இதே போன்று தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களான திருச்செந்தூர், பழனி, மருதமலை உள்ளிட்ட முருகன் கோவில்களிலும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனால் பிரசித்தி பெற்ற முருகன் கோவில்கள் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்தன.

Similar News