வழிபாடு
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்றிரவு நடந்த பள்ளிவேட்டை நிகழ்ச்சிக்கு யானை மீது சாமி சிலை ஊர்வலம் நடந்தது.

சபரிமலையில் இன்று ஐயப்பனுக்கு ஆறாட்டு: திரளான பக்தர்கள் தரிசனம்

Published On 2022-03-18 11:43 IST   |   Update On 2022-03-18 11:43:00 IST
பங்குனி உத்திர திருவிழா நிறைவு பெற்றாலும் பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நாளை வரை திறந்து இருக்கும். நாளை இரவு கோவில் நடை அடைக்கப்படும்.
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

திருவிழாவையொட்டி ஒவ்வொரு நாளும் கோவிலில் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடந்தன. விழாவின் 9-ம் நாளான நேற்று பள்ளிவேட்டை நிகழ்ச்சி நடந்தது.

இதற்காக யானை மீது சாமி ஊர்வலம் நடந்தது. சரங்குத்தியில் நடந்த இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆறாட்டு விழா இன்று பகல் 11.30 மணிக்கு நடந்தது. இதற்காக பம்பை நதியில் அமைக்கப்பட்டிருந்த குளத்தில் ஐயப்பனுக்கு ஆறாட்டு நடந்தது.

இதனை காண இன்று அதிகாலை முதலே கோவிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். ஆறாட்டு விழா முடிந்த பின்னர், இன்று மாலை விழா முடிந்ததும், கோவில் கொடி இறக்கப்படுகிறது.

பங்குனி உத்திர திருவிழா நிறைவு பெற்றாலும் பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நாளை வரை திறந்து இருக்கும். நாளை இரவு கோவில் நடை அடைக்கப்படும்.

அடுத்து சித்திரை விஷூ பண்டிகைக்காக கோவில் நடை அடுத்த மாதம் 10-ந் தேதி திறக்கப்படுகிறது. 15-ந் தேதி சித்திரை விஷூ பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக 18-ந் தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும்.

Similar News