வழிபாடு
மாசாணியம்மன் கோவில்

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் இன்று மயான பூஜை

Published On 2022-02-14 10:16 IST   |   Update On 2022-02-14 11:54:00 IST
மாசாணியம்மன் கோவில் திருவிழாவையொட்டி இன்று நடைபெறும் மயான பூஜை மற்றும் 17-ந்தேதி நடக்கும் குண்டம் திருவிழாவில் கலந்துகொள்ள வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அம்மன் சயன நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மாசாணியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் தை அமாவாசையையொட்டி நடைபெறும் குண்டம் திருவிழா புகழ் பெற்றதாகும். இந்த விழா 18 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும். அதன் படி இந்த ஆண்டிற்கான திருவிழா தை அமாவாசையையொட்டி கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஆனைமலை ஆழியாற்றங்கரையில் உள்ள மயானத்தில் இன்று (திங்கட்கிழமை) நள்ளிரவு 1 மணிக்கு மயான பூஜை நடக்கிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 7.30 மணிக்கு சக்தி கும்பஸ்தா பனம், மாலை 6.30 மணிக்கு மகாபூஜை நடைபெறுகிறது.

16-ந்தேதி மாலை 6 மணிக்கு சித்திரத்தேர் வடம் பிடித்தல், அம்மன் திருவீதி உலா ஆகியவை நடக்கிறது. இரவு 10 மணிக்கு குண்டம் பூ வளர்க்கப்படுகிறது. மறுநாள் 17-ந்தேதி காலை 9.30 மணிக்கு பக்தர்கள் குண்டம் இறங்குகின்றனர். 18-ந்தேதி காலை 10.30 மணிக்கு மஞ்சள் நீராடுதலும், இரவு 8 மணிக்கு மகாமுனி பூஜையும் நடக்கிறது. 19-ந்தேதி பகல் 11.30 மணிக்கு மகா அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜையுடன் விழா நிறைவடைகிறது.

இதற்கிடையே மாசாணியம்மன் கோவில் திருவிழாவையொட்டி இன்று நடைபெறும் மயான பூஜை மற்றும் 17-ந்தேதி நடக்கும் குண்டம் திருவிழாவில் கலந்துகொள்ள வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி வெளி மாவட்ட, மாநில பக்தர்கள் வருவதை தடுக்க ஜமீன் ஊத்துக்குளி, ரெட்டியாரூர், மீனாட்சிபுரம், செமனாம்பதி உள்ளிட்ட பகுதிகளில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. சோதனை சாவடியில் பணியில் இருக்கும் போலீசார் வெளிமாவட்ட, மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களின் வாகனங்களை திருப்பி அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News