வழிபாடு
திருப்பதி

திருப்பதியில் மலைப்பாதை சீரமைக்கும் வரை தரிசனத்திற்கு வரவேண்டாம்: தேவஸ்தானம்

Published On 2021-12-02 10:21 IST   |   Update On 2021-12-02 10:21:00 IST
தற்போது தரிசனத்திற்காக ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்துள்ள பக்தர்கள் மலை பாதை சீரமைக்கும் வரை தரிசனத்திற்கு வரவேண்டாம் எனவும், எப்போது வேண்டுமானாலும் தரிசனம் செய்து கொள்ளலாம் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி, டிச. 2-

சித்தூர் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக நேற்று காலை திருப்பதி மலைப்பாதையில் 14-வது கிலோ மீட்டர் மற்றும் 16-வது கிலோமீட்டரில் மண்சரிவு ஏற்பட்டது. மரங்கள் வேரோடு சாய்ந்து மலைப்பாதையில் விழுந்தன.

மேலும் 16- வது கிலோ மீட்டரில் பெரிய அளவிலான பாறை உருண்டு விழுந்து சாலை முழுவதும் சேதம் அடைந்தது. இதனால் நேற்று மலைப் பாதை மூடப்பட்டு அலிபிரியில் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.

அலிபிரியில் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பக்தர்கள் தரிசனத்துக்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர். தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் என்ஜினியர்கள் சேதமடைந்த பாதையை பார்வையிட்டு சீரமைக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

நீண்ட நேரத்திற்கு பிறகு திருமலையில் இருந்து திருப்பதிக்கு வரும் மலைப்பாதையில் அனைத்து வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. வாகனங்கள் எதிரெதிர் திசையில் செல்வதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

விபத்து ஏற்படாமல் தடுக்க தேவஸ்தான ஊழியர்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு வாகனங்கள் மெதுவாக செல்ல வழிவகுத்தனர். இதனால் வாகனங்கள் திருமலைக்கு செல்ல பல மணி நேரம் ஆனது.

இந்த நிலையில் மலைப் பாதை சீரமைக்கும் பணி 10 முதல் 15 நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது.

தற்போது தரிசனத்திற்காக ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்துள்ள பக்தர்கள் மலை பாதை சீரமைக்கும் வரை தரிசனத்திற்கு வரவேண்டாம் எனவும், எப்போது வேண்டுமானாலும் தரிசனம் செய்து கொள்ளலாம் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News