செய்திகள்
இளம் மஞ்சள் நிற பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர்.

அத்திவரதரை தரிசிக்க ஒரே நாளில் 2 லட்சம் பக்தர்கள் திரண்டனர்

Published On 2019-08-05 08:45 IST   |   Update On 2019-08-05 08:45:00 IST
அத்திவரதரை தரிசிக்க நேற்று ஒரே நாளில் 2½ லட்சம் பக்தர்கள் திரண்டதால் காஞ்சீபுரம் திக்குமுக்காடியது.
உலக புகழ் பெற்ற காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் கடந்த மாதம் 1-ந்தேதி முதல் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். முதல் 31 நாட்கள் சயனகோலத்தில் காட்சியளித்த அத்திவரதர் கடந்த 1-ந்தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சியளித்து வருகிறார்.

அத்திவரதர் நேற்று இளம் மஞ்சள் நிற பட்டாடையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அத்திவரதரை தரிசித்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் அத்திவரதரை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். தொடர்ந்து பக்தர்கள் வந்து கொண்டிருந்ததால் காஞ்சீபுரம் நகரமே திக்குமுக்காடியது. பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.

அத்திவரதரை நேற்று மட்டும் 2 லட்சத்து 40 ஆயிரம் பக்தர்கள் தரிசித்ததாக கோவில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன், துரைக்கண்ணு, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், வேலூர் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆன்ந்த் மற்றும் பலர் நேற்று அத்திவரதரை தரிசித்தனர்.

அத்திவரதரை தரிசித்த பின்னர் நிருபர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-

தமிழகத்தில் அத்திவரதர் ஆன்மிக புரட்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். பகுத்தறிவுவாதிகள் என்று கூறிக் கொண்ட பலர் இன்று வெளிப்படையாக அத்திவரதரை தரிசிக்கின்றனர். இதை விமர்சனம் செய்யவில்லை, வரவேற்கிறேன். இத்தகைய மாறுதல் தான் தமிழகத்திற்கு வரவேண்டும் என்பது என்னுடைய கருத்து.

ஆன்மிகம் வளர்ந்தால் தான் சேவை மனப்பான்மை பரந்து விரிந்து அருளுடைய பூமியாக தமிழகம் மாறும். மற்ற மாநிலங்களில் இருந்து அத்திவரதரை தரிசனம் செய்ய ஏராளமானோர் வருகிறார்கள். இது மகிழ்ச்சி அளிக்கிறது. அத்திவரதர் விழா ஏற்பாடுகள் முதலில் சுணக்கமாக இருந்தது, ஆனால் இன்று பல குறைகள் களையப்பட்டு சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருக்கிறார்கள்.

வேலூர் தொகுதியில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர். அமைச்சர்கள் அத்தனை பேரும் சிறப்பாக தேர்தல் பணியாற்றினர். நாங்கள் உறுப்பினர் சேர்க்கையில் தீவிரமாக இருந்ததால் பிரசாரத்துக்கு செல்லவில்லை.

தி.மு.க.வினர் இதற்கு முன்னர் மறைந்து ஆன்மிகத்தை கடைபிடித்தார்கள். தற்போது ஒளிவுமறைவு இல்லாமல் கடை பிடிக்கிறார்கள். தி.மு.க. சகோதரர்கள் தங்கள் வீட்டு திருமணங்களை நாள் பார்த்து தான் செய்கிறார்கள். தி.மு.க.வை சேர்ந்த இளைஞர் ஒருவர் கூட நாத்திகவாதி கிடையாது.

ஸ்டாலின் கூட நாத்திகவாதி கிடையாது. அவருக்கும் கடவுள் நம்பிக்கை இருக்கிறது. அதனால் தான் அவருடைய தாய் மற்றும் மனைவியை வைத்து இறைநம்பிக்கையை பூர்த்தி செய்து கொள்கிறார். அதை நான் வரவேற்கிறேன். ஸ்டாலினும் அத்திவரதரை நேரில் வந்து தரிசிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News