செய்திகள்
கெங்கையம்மன் சிரசு பக்தர்கள் வெள்ளத்தில் பவனி வந்த காட்சி.

குடியாத்தத்தில் பக்தர்கள் வெள்ளத்தில் கெங்கையம்மன் சிரசு ஊர்வலம்

Published On 2019-05-15 15:29 IST   |   Update On 2019-05-15 15:29:00 IST
பம்பை, உடுக்கை, சிலம்பாட்டம், புலி ஆட்டம் ஆகிய பாரம்பரிய கலைகள் முன்செல்ல, அம்மன் சிரசு ஊர்வலம் பக்தர்கள் வெள்ளத்தில் பவனியாக கொண்டு செல்லப்பட்டது
குடியாத்தம் கோபாலபுரம் கவுண்டன்ய மகா நதி கரையில் உள்ள கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா கடந்த 30-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. 11-ந் தேதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று தேரோட்டம் நடைபெற்றது.

இன்று காலை 6 மணிக்கு தரணம்பேட்டையில் உள்ள முத்தியாலம்மன் கோவிலில் இருந்து கெங்கையம்மன் சிரசு பக்தர்களின் வெள்ளத்தில் புறப்பட்டது. பம்பை, உடுக்கை, சிலம்பாட்டம், புலி ஆட்டம் ஆகிய பாரம்பரிய கலைகள் முன்செல்ல, அம்மன் சிரசு ஊர்வலம் பக்தர்கள் வெள்ளத்தில் பவனியாக கொண்டு செல்லப்பட்டது. நடுப்பேட்டை, காந்திரோடு, ஜவஹர்லால் தெரு வழியாக கோபாலபுரத்தில் உள்ள கெங்கையம்மன் கோவிலை வந்தடைந்தது.

சிரசு ஊர்வலம் நடைபெற்ற தரணம்பேட்டை முதல் கோபாலபுரம் வரை இருபுறமும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் மட்டுமின்றி ஆந்திரா மற்றும் கர்நாடகா பக்தர்களும் வந்திருந்தனர். லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்ததால் குடியாத்தம் நகரம் முழுவதும் திருவிழாக்கோலமாக காட்சி அளித்தது.

பக்தர்கள் வெள்ளத்தில் சிரசு கொண்டு செல்லப்பட்ட போது ஆங்காங்கே மரங்கள், சுற்றுச்சுவர்கள், வீட்டு மாடி மீது நின்றும் அம்மன் சிரசை பக்தர்கள் தரிசனம் செய்தனர். சிரசு ஊர்வலம் நடைபெற்ற வழிநெடுகிலும் கெங்கையம்மனுக்கு பூமாலை சாத்தியும், கற்பூரம் ஏற்றியும் தேங்காய்களை உடைத்து பக்தர்கள் வழிபட்டனர்.

பின்னர் கெங்கையம்மன் கோவில் சிரசு மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த இருந்த சண்டாளச்சி உடலில் பொருத்தப் பட்டது. சிறப்பு பூஜைகளும், அதனைத்தொடர்ந்து கண் திறப்பு நிகழ்ச்சியும் வெகு விமரிசையாக நடந்தது.

கோவிலில் அம்மன் கண் திறப்பு நிகழ்ச்சிக்கு பின்னர் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர். இன்று இரவு 8 மணிக்கு அம்மன் சிரசு சண்டாளச்சி உடலில் இருந்து பிரித்து எடுக்கப்பட்டு கவுண்டன்ய மகாநதி, ராஜேந்திரசிங் தெரு வழியாக சுண்ணாம்புபேட்டையில் உள்ள புங்கனூர் அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்படும்.

அப்போது, கவுண்டன்ய மகாநதி ஆற்றில் வாண வேடிக்கை நிகழ்ச்சி நடக்கும்.

சிரசு ஊர்வலத்தை யொட்டி குடியாத்தத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

Similar News