செய்திகள்

மயிலாடுதுறையில் நாளை மகா புஷ்கர புனித நீராடல்

Published On 2017-09-11 13:07 IST   |   Update On 2017-09-11 13:07:00 IST
மயிலாடுதுறையில் காவிரி புஷ்கர புனித நீராடல் நாளை தொடங்குகிறது. இதற்காக பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
காவிரி புஷ்கரம் என்பது குருபகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு மாறும் காலமாகும். இது காவிரி புஷ்கர விழாவாக கொண்டாடப்படுகிறது.

144 ஆண்டுகளுக்கு பின்பு இது போன்ற விழா காவிரியில் கொண்டாடப்பட உள்ளது. இதனால் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் 24-ந் தேதி வரை நடைபெறும் இவ் விழாவில் கலந்து கொண்டு பக்தர்கள் புனித நீராடினால் பிதுர்தோ‌ஷம், ஹத்தி தோ‌ஷம், நதி தோ‌ஷம் நீங்கி வறுமை, பஞ்சம் அகன்று வாழ்க்கை செழுமையடையும்.

உலகம் சுபிட்சம் பெறும். மேலும் மூதாதையர்களுக்கு திதி, தர்ப்பணங்கள் கொடுத்து பாவத்தை தீர்த்து கொள்ளலாம். இந்த 12 நாட்களில் ஏதாவது ஒரு நாளில் காவிரியில் புனித நீராடினால் 3½ கோடி தீர்த்தத்தில் நீராடிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

கங்கை, யமுனை, சரஸ்வதி போன்ற புண்ணிய நதிகள் தங்கள் பாவங்களை போக்கி கொள்ள ஐப்பசி (துலாம்) மாதத்தில் மயிலாடுதுறை துலாக் கட்டத்தில் 30 நாட்கள் தங்கி புனித நீராடி தங்கள் பாவங்களை போக்கி கொண்டது என்பது ஐதீகமாக உள்ளது.

மயிலாடுதுறை துலாக்கட்டம் காசிக்கு இணையான தலமாக கருதப்படுகிறது. இங்கு பக்தர்கள் நீராடுவ தவற்கு ரி‌ஷப தீர்த்த மண்டபத்தை சுற்றி 100 மீட்டர் நீளத்தில் நீர் தேக்கம் அமைக்கப்பட்டு போர்வெல் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டு உள்ளது.

இந்த பணியின் போது கண்டு பிடிக்கப்பட்ட 12 கிணறுகள சீரமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாள் விழாவிலும் சிறப்பு ஹோமங்கள்,வேத பாராயணம், திருமுறைகள், கவியரங்கம், மங்கல ஆரத்தி, கலச பூஜை, ஆன்மீக ஊர்வலம், ஆன்மீக சொற்பொழிவு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்.



தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஞானாம்பிகை சமேத வதானேஸ்வரர், விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர், திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி, அறம் வளர்த்த நாயகி சமேத அய்யாறப்பர் சுவாமி ஆகியவை பஞ்ச மூர்த்திகளுடன் காவிரியின் இரு கரைகளிலும் நாளை எழுந்தருளி காலை 8.25 மணிக்கு தீர்த்தவாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதனை தொடர்ந்து காஞ்சி சங்கராச்சாரியார் சுவாமிகள், ஆதீன கர்த்தர்கள், மடாதிபதிகள், துறவியர்கள் மற்றும் பக்தர்கள் புனித நீராடுகிறார்கள்.

விழாவை சிறப்பிக்கும் வகையில் துலாக்கட்டம் தெற்கு கரை அரசமரத்தடியில் 7½ அடி உயரம், 1½ டன் எடையுள்ள காவிரி அம்மன் சிலை நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.சிவபுரம் வேதாசிவாகம பாடசாலை நிறுவனர் சாமிநாத சிவாச்சாரியார் தலைமையில் சிறப்பு ஹோமங்கள்செய்யப்பட்டு சிலைக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

பாதுகாப்பு பணியில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சேகர் தேஷ்முக் தலைமையில் 900 போலீசார் குவிக்கப்பட உள்ளனர். கண்காணிப்பு கேமிராவும் பொருத்தப்பட்டு உள்ளது.பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய மண்டல ஐ.ஜி. வர தராஜூலு ஆய்வு செய்தார்.

4 இடங்களில் வாகன நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டு உள்ளது.25 இடங்களில் நவீன கழிவறை வசதி செய்யப்பட்டு உள்ளது. புஷ்கர விழாவில் புனித நீராட மயிலாடுதுறையில் பக்தர்கள் குவிய தொடங்கி விட்டனர்.

Similar News