செய்திகள்

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

Published On 2017-03-10 15:50 IST   |   Update On 2017-03-10 15:50:00 IST
விருத்தகிரீஸ்வரர் கோவில் தேரோட்டம் இன்று நடந்தது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

விருத்தாசலம்:

விருத்தாசலத்தில் பழமைவாய்ந்த விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசிமக பெருவிழா நடைபெறும். இந்த ஆண்டிற்கான விழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் கடந்த 7-ந் தேதி விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலை கட்டிய விபசித்து முனிவருக்கு விருத்தகிரீஸ்வரர் காட்சி அளிக்கும் ஐதீக திருவிழா நடந்தது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடந்தது. அதிகாலை 4.30 மணிக்கு விருத்தகிரீஸ்வரர், விருத்தாம் பிகை, ஆலத்து விநாயகர், வள்ளி தெய்வானை உடனுறை முருகன், சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினர்.

முதலில் ஆலத்து விநாயகர் எழுந்தருளிய தேர் புறப்பட்டது. அப்போது சிவச்சாரியார்கள் வேதமந்திரங்கள் ஓத தேரோட்டம் தொடங்கியது. விருத்தாசலம் தொகுதி கலைச்செல்வன் எம்.எல்.ஏ. தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தார். ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேர் 4 கோட்டை வீதிகள் மற்றும் முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது.

இதேபோல முருகன், விருத்தகிரீஸ்வரர், விருத் தாம்பிகை, சண்டிகேஸ்வரர் தேர்களும் அடுத்தடுத்து முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தன. இன்று நடைபெற்ற தேரோட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தேரோட்ட நிகழ்ச்சியையொட்டி விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 3 உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் செய்து இருந்தனர்.

நாளை (சனிக்கிழமை) மாசிமக திருவிழாவும், நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தெப்ப உற்சவமும், 13-ந் தேதி (திங்கட்கிழமை) சண்டிகேஸ்வரர் உபயத்துடன் விழா நிறைவடைகிறது.

Similar News