செய்திகள்

கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது

Published On 2017-02-02 10:29 IST   |   Update On 2017-02-02 10:29:00 IST
கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலில் 85 ஆண்டுக்கு பிறகு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்த கொண்டு தரிசனம் செய்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவில் உலக பிரசித்தி பெற்றது. 

ராஜேந்திரசோழனால் உருவாக்கப்பட்ட இக்கோவில் யுனெஸ்கோவால் உலக புராதன சின்னமாக அறிவிக்கப்பட்டு சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது.

இந்த கோவிலில் கடந்த 1932-ம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டதாக சில கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளது. அதன்பிறகு தற்போது 85 ஆண்டுகளுக்கு பின் இன்று (2-ந்தேதி) கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தொல்லியல்துறை அனுமதியுடன் காஞ்சி அன்னாபிஷேக கமிட்டியினர் செய்தனர்.

கும்பாபிஷேக விழாவையொட்டி இக்கோவிலில் 400 வருடங்களுக்கு பின்னர் தற்போது கடந்த 19-ந்தேதி இந்தோனேசியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 52 அடி உயர வேங்கை மரத்திலான கொடிமரம் அமைக்கப்பட் டது. கொடிமரத்திற்கு தங்க முலாம் பூசப்பட்ட தகடு பொருத்தும் பணி நேற்று நடைபெற்றது.

தொடர்ந்து 6-ம் கால யாகசாலை பூஜை, விசே‌ஷ சந்தி மருந்து சாத்துதல், பூர்ணாகுதி, தீபாராதனை, மாலை 5 மணிக்கு யாகசாலை பூஜை, விசே‌ஷ சந்தி, இரவு 7 மணிக்கு பிரம்மசாரி பூஜை, கன்யா பூஜை, தம்பதிபூஜை, லட்சுமி பூஜை, இரவு 8 மணிக்கு 7-ம் கால யாசாலை பூஜை, பிம்பசுத்திரஷாபந்தனம், பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது.

இன்று காலை 8.30 மணிக்கு கடம் புறப்பாடு 9.30 மணிக்கு சோழீஸ்வரர் ஆலயம், பெரிய நாயகி அம்மன், துர்க்கையம்மன் உட்பட அனைத்து கோவில்களில் அமைக்கப்பட்டிருந்த கலசங்களுக்கு கங்கையிலிருந்து கொண்டுவரப்பட்ட புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அப்போது அங்கு கடலென திரண்டிருந்த பக்தர்கள் மீது கும்பாபிஷேக புனித நீர் தெளிக்கப்பட்டது.

மாலை 4 மணிக்கு மகாபிஷேகம், 5 மணிக்கு திருக்கல்யாணம், 6 மணிக்கு சுவாமி திருவீதிஉலா ஆகியவை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை காஞ்சி காமகோடி அன்னாபிஷேக கமிட்டியினர் செய்துள்ளனர்.

விழாவில் தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களின் வசதிக்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார்கிரி தலைமையில் போலீசார் சிறப்பாக செய்திருந்தனர்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்த திருப்பைஞ்ஞீலி கிராமத்தில் அமைந்துள்ளது நீலிவனேஸ்வரர் கோவில். சிவஸ்தலமான அங்கு நீலிவனேஸ்வரர் என்னும் நீலகண்டேஸ்வரரும், விசாலாட்சியும் அருள்பாலிக்கிறார்கள்.

பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் திருப்பணிகள் நடந்தது. இதையடுத்து இன்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக கடந்த 24-ந்தேதி கிராம சாந்தி பூஜை, 25-ந்தேதி விக்னேஸ்வர பூஜை, பைரவர், கணபதி ஹோமம், அஷ்டலெட்சுமி பூஜை உள்பட பூஜைகள் நடந்தன. 26-ந்தேதி கொள்ளிடம் ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்து வந்தனர்.

30-ந்தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின. இதையடுத்து இன்று காலை 8.15 மணியளவில் விநாயகர், ஞீலிவனேஸ்வரர், விசாலாட்சி அம்பாள், நீள் நெடுங்கண் நாயகி, கஜலட்சுமி, செந்தாமரைக்கண்ணன், எமன் சன்னதி, சோற்றுடைய ஈஸ்வரர், காசி விஸ்வநாதர் ஆகிய சன்னதி விமானங்களுக்கும், வசந்த மண்டபத்தில் உள்ள விநாயகர் சன்னதி, விமானம், ராவணன் கோபுரத்திற்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 8.45 மணிக்கு அனைத்து மூலஸ்தான மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது.

விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பக்தர்கள் வசதிக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

Similar News