செய்திகள்

சபரிமலையில் மகர விளக்கு பூஜைக்காக நாளை மாலை நடைதிறப்பு

Published On 2016-12-29 12:20 IST   |   Update On 2016-12-29 12:20:00 IST
சபரிமலையில் மகர விளக்கு பூஜைக்காக நாளை மாலை 5 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்படுகிறது. அன்று சுவாமி அய்யப்பனுக்கு தீபாராதனை மட்டும் காட்டப்படும்.
திருவனந்தபுரம்:

சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் கடந்த 26-ந்தேதி மண்டல பூஜை நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து அன்று மாலை கோவில் நடை அடைக்கப்பட்டது. தற்போது சபரிமலையில் மகர விளக்கு பூஜைக்காக நாளை 30-ந்தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்படுகிறது.

அன்று சுவாமி அய்யப்பனுக்கு தீபாராதனை மட்டும் காட்டப்படும். வேறு பூஜைகள் எதுவும் நடைபெறாது.

மறுநாள் 31-ந்தேதியில் இருந்து சுவாமி அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம், படிபூஜை உள்பட விசே‌ஷ பூஜைகள் நடைபெறும். மேலும் 11-ந்தேதி பேட்டை துள்ளலும் நடைபெறும்.

மகரவிளக்கு பூஜையின் போது சுவாமி அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க ஆபரணங்கள் பந்தளம் அரண்மனையில் இருந்து 12-ந்தேதி ஊர்வலமாக புறப்படுகிறது. 13-ந்தேதி இந்த ஊர்வலம் பம்பை வந்தடைகிறது.

அங்கு பம்பை விளக்கு, பம்பை சத்யா நடைபெறுகிறது. அன்று மாலை சுவாமி அய்யப்பனுக்கு தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்படும்.

14-ந்தேதி மாலை 6.30 மணிக்கு பிரசித்திபெற்ற மகர விளக்கு பூஜை நடைபெறுகிறது. அப்போது பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவில் சுவாமி அய்யப்பன் காட்சி தருவதாக ஐதீகம். மகர ஜோதியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் திரள்வார்கள்.


மகர விளக்கு பூஜையையொட்டி சபரிமலையில் தூய்மை பணி நடைபெற்ற காட்சி.


மகர விளக்கு பூஜையையொட்டி தற்போதே சபரிமலையில் பக்தர்கள் குவிய தொடங்கி விட்டனர். ஏராளமான அய்யப்ப பக்தர்கள் காட்டு பகுதியில் கூடாரங்கள் அமைத்து தங்கி உள்ளனர்.

அவர்கள் தங்கி உள்ள பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிமாக இருப்பதால் பக்தர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் அறிவுரை வழங்கி உள்ளனர். மேலும் அவர்கள் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

Similar News