செய்திகள்

மூளையில்லாத கேப்டன்: சர்பராஸ் அகமது மீது சோயிப் அக்தர் கடும் தாக்கு

Published On 2019-06-17 09:48 GMT   |   Update On 2019-06-17 09:48 GMT
இந்தியாவுக்கு எதிராக எந்தவித எதிர்தாக்குதலும் இல்லாமல் சரணடைந்ததால் பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமதுவை சோயிப் அக்தர் கடுமையாக சாடியுள்ளார்.
மான்செஸ்டர் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் குவித்தது.

இதைத்தொடர்ந்து, 337 ரன்கள் என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி விளையாடியது. கடின இலக்கை அடைய முடியாமல் போராடிய பாகிஸ்தானின் ஆட்டம் மழையால் தடைபட்டு, பின்னர் விளையாடி டக்வொர்த் லிவிஸ் விதிப்படி இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்திய அணிக்கு பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான சர்பராஸ் அகமது மைதானத்தில் கீப்பிங் செய்தபடியே, கொட்டாவி விட்டு கொண்டிருந்தார். அவரது அனிச்சையான இந்தச்செயலை நெட்டிசன்கள் தற்போது சகட்டுமேனிக்கு கலாய்த்து வருகின்றனர்.

இந்தியா - பாகிஸ்தான் போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இம்ரான்கான் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் பாகிஸ்தான் வீரர்களுக்கு அறிவுரை வழங்கி இருந்தார். கடைசி பந்து வரை போராடும்படியும், டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் செய்யுமாறும் அவர் கேட்டு இருந்தார்.

ஆனால் பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது இம்ரான் கானின் அறிவுரையை நிராகரித்தார். டாஸ் வென்ற அவர் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையும் விமர்சித்து உள்ளனர். இந்நிலையில் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயிப் அக்தர் மூளையில்லாத கேப்டன் என சர்பராஸ் அகமது மீது சாடியுள்ளார்.

இதுகுறித்து சோயிப் அக்தர் கூறுகையில் ‘‘முதலில் பீல்டிங் தேர்ந்தெடுத்ததன் மூலம் பாகிஸ்தான் மிகப்பெரிய தவறு செய்தது. பாகிஸ்தான் 260-280 ரன்கள் எடுத்திருந்தாலும், பந்து வீச்சின் மூலம் இந்தியாவை கட்டுப்படுத்தியிருக்கலாம்.



சர்பராஸ் அகமது எப்படி மூளையில்லாதவர் போன்று செயல்பட்டார் என்பதை என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை. பாகிஸ்தான் அணியால் சிறப்பாக சேஸிங் செய்ய முடியாது என்பதை அவர் எப்படி மறந்தார்?. நம்முடைய பலமே பந்து வீச்சுதான் என்பது தெரியும். இதுதான் முக்கியமானது. சர்பராஸ் அகமது டாஸ் வென்றபோதே பாகிஸ்தான் பாதியளவு வெற்றி பெற்றது. ஆனால், இந்த போட்டியை தோற்றகடிக்க அவர் கடினமான முயற்சி செய்துவிட்டார்.

இந்த போட்டி 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியின் கண்ணாடிப்படம் போன்றது. அன்றைய தினம் இந்தியா செய்த அனைத்து தவறுகளையும் பாகிஸ்தான் செய்தது’’ என்றார்.
Tags:    

Similar News