துபாயில் நடந்த வான் சாகசத்தில் தேஜஸ் போர் விமான விபத்துக்கு காரணம் என்ன? நிபுணர்கள் கருத்து
- ஒரு சிறிய தவறான கணக்கீடு கூட கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.
- இந்தியாவின் முதல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட போர் விமானமான தேஜஸ் விமானம் சுமார் 24 ஆண்டுகளாக சேவையில் உள்ளது.
துபாய்:
துபாயில் உள்ள அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள துபாய் வேர்ல்டு சென்டிரல் பகுதியில் விமான கண்காட்சி நடந்தது.
இதில் இந்தியா, அமெ ரிக்கா, ரஷியா, சீனா உள் பட 115 நாடுகளை சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட விமான தொழில்நுட்ப நிறுவனங்கள் பங்கேற்றன.
இதற்கிடையே 5 நாள் கண்காட்சியின் நிறைவு நாளான நேற்று நடந்த விமான சாகச நிகழ்ச்சியில் இந்திய ராணுவத்தின் தேஜஸ் போர் விமானம் பங்கேற்றது. அப்போது தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளானது.
திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் மோதி வெடித்து சிதறியது. இதில் விமானி நமன் சியால் உயிரிழந்தார்.
இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனத்தால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் விமான விபத்துக்கான காரணம் குறித்து இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தேஜஸ் போர் விமான விபத்துக்கான காரணம் குறித்து நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறியதாவது:-
வான் சாகசத்தின்போது தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளாகும் முன்பு அதை விமானி, பேரல் ரோல் எனப்படும் ஒரு சுழன்று செல்லும் செயல் முறையை செய்ய முயற்சித்ததாக தெரிகிறது.
இதில் விமானம் திரும்பப்பட்டு மீண்டும் மேலே சென்று தனது முழு சுழற்சியை நிறைவு செய்யும். இது ஒரு சிக்கலான சூழற்சி இல்லை என்றாலும், விமானி சிறிது நேரம் தலை கீழாக இருந்த பின்னர் விமானம் தரையில் மோதியது. விமானம் தலைகீழாக இருந்து மீண்டும் மேலே எழுப்ப வேண்டும். ஆனால் அதுபோன்று நடக்கவில்லை.
விமானம் மீண்டும் மேலே செல்ல முயன்ற போது தரைக்கு மிக அருகில் இருந்திருக்கலாம். மேலும் விமானம் மீண்டும் உயரும் வேகத்தைக் கொண்டிருக்கவில்லை. இதனால் விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம். ஒரு போர் விமானம் அதிக வேகத்தில் இத்தகைய சூழற்சிகளை செய்வது மிகவும் கடினம்.
ஒரு சிறிய தவறான கணக்கீடு கூட கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றனர். மேலும் திடீரென்று உந்துதல் சக்தியை இழந்திருக்கலாம் அல்லது கட்டுபாட்டு கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
விமான விபத்துக்கு தொழில் நுட்ப கோளாறு காரணமா அல்லது வேறு காரணமா என்பது முழுமையான விசாரணைக்கு பின்னரே தெரியவரும்.
இந்தியாவின் முதல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட போர் விமானமான தேஜஸ் விமானம் சுமார் 24 ஆண்டுகளாக சேவையில் உள்ளது.
விமானம் கட்டுப்பாட்டை இழந்தாலும் விமானி உடனடியாக விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் வெளியேறும் வசதி உள்ளது. ஆனாலும் விபத்தில் விமானியான விங் கமாண்டர் நமன் சியால் உயிரிழந்து உள்ளார். இவர் இமாச்சல பிரதேச மாநிலம், கங்ரா மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவரது மனைவியும் இந்திய விமானப்படை அதிகாரியாக உள்ளார்.
நமன் சியால் கடந்த 2009-ம் ஆண்டு இந்திய விமானப்படையில் பயிற்சியை தொடங்கினார். நமன் தன் பெற்றோர் மற்றும் குழந்தையுடன் கோவை சூலூர் விமானப்படை தளம் வளாகத்தில் வசித்து வந்தார். அவரது மனைவி கொல்கத்தாவில் பயிற்சியில் இருந்து வருகிறார்.
நமன் சியாலின் தந்தை ஜெகன்நாத் இந்திய ராணுவத்தின் மருத்துவ பிரிவில் சிறிது காலம் பணியாற்றினார்.