உலகம்

நான் வயது குறைந்தவன் என்பதால் மிகவும் விமர்சிக்கப்படுகிறேன்: விவேக் ராமசாமி

Published On 2023-09-19 08:16 GMT   |   Update On 2023-09-19 08:16 GMT
  • டொனால்ட் டிரம்ப் மீது பல மாநிலங்களில் பல வழக்குகள் பதிவாகியுள்ளது
  • 33-வயதில் தாமஸ் ஜெபர்ஸன் சுதந்திர பிரகடனத்தை எழுதினார்

அமெரிக்காவில், அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

இத்தேர்தலில் வெற்றி பெற ஆளும் ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும் குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் தீவிரமாக போட்டி போட்டு வருகின்றனர். ஆனால், டொனால்ட் டிரம்ப் மீது பதிவாகியுள்ள கிரிமினல் வழக்குகளின் தீர்ப்பை பொறுத்தே அவரது தகுதி நிர்ணயிக்கப்படும் எனும் நிலை உள்ளது.

இதனால் குடியரசு கட்சியில் அவருக்கு அடுத்த நிலையில் உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கரான 38-வயதான விவேக் ராமசாமிக்கு ஆதரவு நாளுக்கு நாள் கூடி வருகிறது. பல்வேறு பிரச்சினைகள் குறித்து அவர் தெரிவித்து வரும் ஆணித்தரமான, துணிச்சலான கருத்துக்களால் அவருக்கு எதிர்ப்பும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் ஒரு தனியார் தொலைக்காட்சி பேட்டியில் தனது மீதான விமர்சனங்களை குறித்து விவேக் ராமசாமி கருத்து தெரிவித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

எனது வளர்ச்சி பலருக்கு பொறாமையை ஏற்படுத்தியுள்ளது. எனது குறைந்த வயது காரணமாக நான் இந்த பதவிக்கு தகுதியானவன் அல்ல என சிலர் நினைக்கின்றனர். சுதந்திர பிரகடனத்தை (Declaration of Independence) எழுதும் போது அப்போதைய அதிபர் தாமஸ் ஜெபர்ஸன், 33 வயதே ஆனவர் என்பதை நாம் அறிவோம். குறைந்த வயதுள்ளவர்கள் அவர்களது வாழ்நாளில் இனிமேல்தான் சிறப்பான நாட்களை எதிர்கொள்ள போகிறார்கள். எனவே, தனது வாழ்நாளின் சிறப்பான நாட்களை எதிர்கொள்ளும் வாய்ப்புள்ள ஒருவர்தான் ஒரு நாட்டிற்கு கிடைக்க போகும் சிறப்பான எதிர்கால நாட்களையும் உருவாக்கி தர முடியும். சிறப்பான தகுதி, மேன்மையை தேடுதல், பொருளாதார வளர்ச்சி, கருத்து சுதந்திரம் மற்றும் வெளிப்படையான விவாதம் போன்ற அடிப்படை விஷயங்களைத்தான் அமெரிக்கர்கள் இன்னமும் மதிக்கிறார்கள். இதனை நிலைநிறுத்துவதே எனது லட்சியம். வெறும் விமர்சனங்களை மட்டுமே முன்வைத்து அரசியல் செய்வதை நான் விரும்பவில்லை.

இவ்வாறு விவேக் தெரிவித்தார்.

கணினி மென்பொருள் துறையிலும், பிற உயர் தொழில்நுட்ப துறையிலும் இந்திய இளைஞர்கள் மிகவும் ஆர்வத்துடன் பெற போராடும் அமெரிக்காவின் ஹெச்-1பி விசா எனும் அந்நாட்டின் உள்நுழையும் நடைமுறையை நீக்கி விடுவேன் என சில தினங்களுக்கு முன் விவேக் அறிவித்தார். இதற்கு இந்தியர்களிடையே பெரும் எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News