உலகம்

18 வயதில் வாக்குரிமை... தேர்வு கட்டாயம்! விவேக் அதிரடி

Published On 2023-12-02 09:02 GMT   |   Update On 2023-12-02 10:12 GMT
  • வாக்களிப்பவர்களுக்கு பொது அறிவு இருப்பதை சோதிக்க வேண்டும் என்கிறார் விவேக்
  • வாக்களிக்கும் உரிமையை கல்வியறிவுடன் கலப்பதை விமர்சகர்கள் எதிர்க்கின்றனர்

அமெரிக்காவில் அடுத்த வருடம் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடனை எதிர்த்து முன்னாள் அமெரிக்க அதிபரும் குடியரசு கட்சியை சேர்ந்தவருமான முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக களம் இறங்கி உள்ளார். ஆனால், டொனால்ட் டிரம்ப் மீதுள்ள பல்வேறு வழக்குகளில் வரப்போகும் தீர்ப்பினை பொறுத்தே அவரது அரசியல் எதிர்காலம் அமையும் நிலை உள்ளது.

இதனால் குடியரசு கட்சி வேட்பாளர்களில் டிரம்பிற்கு அடுத்த நிலையில் அதிக ஆதரவு உள்ள இந்திய வம்சாவளி தொழிலதிபர் விவேக் ராமசாமி ஆதரவு கோரி பிரசாரம் செய்து வருகிறார்.

பல்வேறு நகரங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் அமெரிக்காவை சூழ்ந்துள்ள சிக்கல்கள் குறித்தும் அவற்றிற்கான தீர்வுகள் குறித்தும் பேசி வரும் விவேக் ராமசாமி, முதன்முறை மற்றும் இளம் வாக்காளர்கள் குறித்து பேசிய கருத்து ஒன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின்படி 18 வயது நிறைவடைந்தவர்கள் தேர்தல்களில் வாக்களிக்க தகுதி பெறுகிறார்கள்.

ஆனால், விவேக் ராமசாமி முன்மொழிந்துள்ள மாற்று திட்டத்தின்படி, 18 வயதை எட்டியவர்கள் தேர்தலில் வாக்களிக்க அடிப்படை பொது அறிவிற்கான ஒரு தேர்வை எழுதி வெற்றி பெற வேண்டும் அல்லது 6 மாதங்கள் ராணுவத்தில் பணியாற்றி இருக்க வேண்டும் அல்லது முதல்நிலை அவசர சேவை பணியாளர்களாக சில காலங்கள் பணியாற்றி இருக்க வேண்டும்.

தனது இந்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ள விவேக், வாக்களிக்க விரும்பும் இளைஞர்களுக்கு அடிப்படை பொது அறிவு அவசியம் என கூறுகிறார். தான் வென்றால் இதற்கான அரசியலமைப்பு சட்ட மாறுதல்களை கொண்டு வர உத்தேசித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

விவேக்கின் இந்த கருத்திற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இது கருப்பினத்தவர்களுக்கான வாக்களிக்கும் உரிமையை பறிக்கும் முயற்சி என்றும் பல்வேறு பயனற்ற மற்றும் பதில் தெரியாத கேள்விகள் கேட்கப்பட்டு அவற்றிற்கு பதிலளிக்க முடியாததால், வாக்குரிமை இழக்கும் அபாயம் தோன்றும் என கருத்து தெரிவிக்கும் கருப்பின பிரதிநிதிகள், கல்வியையும் வாக்களிக்கும் உரிமையையும் ஒன்றுடன் ஒன்று கலக்க கூடாது என வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, இதற்கான அரசியலமைப்பு சட்ட மாறுதலை கொண்டு வர அமெரிக்க பாராளுமன்றத்தின் இரண்டு சபைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிட்ட வேண்டியது அவசியம் என்றும், 4ல் 3 மாநில சட்டசபைகளிலும் இதற்கு ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்றும் அதனால் இது நிறைவேறுவது கடினம் என்றும் சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

விவேக் ராமசாமி முன்மொழிந்துள்ள மாறுதல்கள் அதிபர் தேர்தலில் அவருக்கும் அவரது குடியரசு கட்சிக்கும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது வரும் நாட்களில்தான் தெரிய வரும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Tags:    

Similar News