உலகம்

VIDEO: போர் நிறுத்தத்தை பேருவகையுடன் கொண்டாடும் காசா மக்கள்!

Published On 2025-10-10 12:12 IST   |   Update On 2025-10-10 12:12:00 IST
  • 2 வருட காசா இனப்படுகொலையில் 20,179 குழந்தைகள் கொல்லப்பட்டனர்.
  • போர் நிறுத்த திட்டத்திற்கு இஸ்ரேல் அமைச்சவரையும் இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

அக்டோபர் 2023 இல் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போர் 2 வருடங்கள் கழித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் -இன் முயற்சியால் முடிவுக்கு வர உள்ளது.

பணய கைதிகள் விடுவிப்பு உள்ளிட்ட டிரம்ப் உடைய 20 அம்ச அமைதி திட்டத்தை ஹமாஸ் அமைப்பும் , இஸ்ரேலும் ஏற்றுக்கொண்ட நிலையில் போர் நிறுத்தத்தை அமல்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

இன்று இந்த போர் நிறுத்த திட்டத்திற்கு இஸ்ரேல் அமைச்சவரையும் ஒப்புதல் வழங்கிவிட்ட நிலையில் போர் நிறுத்தம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி காசாவின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து இஸ்ரேலியப் படைகள் வெளியேறும். இஸ்ரேலியக் காவலில் உள்ள பாலஸ்தீனக் கைதிகள் திங்கட்கிழமை விடுவிக்கப்படுவார்கள். ஹமாஸ் காவலில் உள்ள மீதமுள்ள இஸ்ரேலியக் கைதிகள் உடனடியாக விடுவிக்கப்படுவார்கள்.

இதனால் பணய கைதிகள் விடுதலையை எதிர்கொக்கும் இஸ்ரேலியர்களும், தினந்தோறும் நிகழும் தாக்குதல்களில் இருந்து விடிவுகாலம் பிறக்கும் என்ற நம்பிக்கை பெற்ற காசா மக்களும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

 கடந்த 2 வருடங்களில் நடந்த இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களால் காசாவில் 67,200 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஐநா கூறுகிறது. இதற்கிடையே உணவுப் பொருட்களை இஸ்ரேல் நிறுத்தி வைத்ததன் காரணமாக இதுவரை 200 க்கும் மேற்பட்டோர் பட்டினியால் உயிரிழந்துள்ளனர்.

அண்மையில் காசா சுகாதர அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 2 வருட காசா இனப்படுகொலையில் 20,179 குழந்தைகள் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது. அவர்களின் 1,029 குழந்தைகள் ஒரு வயதுக்குட்பட்டவர். இனப்படுகொலையின் போது பிறந்து பின்னர் 420 குழந்தைகள் கொல்லப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசாவில் உள்ள இடிபாடுகளை அகற்றவே 10 வருடங்கள் ஆகும் என ஐநா தெரிவித்துள்ளது. இந்நிலையில் தொடர் சோகங்களுக்கு முடிவுரையாக காசா மக்களுக்கு தற்போதைய போர் நிறுத்தம் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

 ஒப்பந்தம் எட்டப்பட்ட போதிலும், வியாழக்கிழமை அதிகாலையில் காசாவின் வடக்கு பகுதிகளில் குண்டுவெடிப்புகள் மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்கள் தொடர்ந்ததாக சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இஸ்ரேலியத் தாக்குதல்கள் சில பகுதிகளில் தொடர்ந்த போதிலும் காசாவின் பல்வேறு பகுதிகளில் இந்த போர் நிறுத்தத்திற்கான கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

கான் யூனிஸில் உள்ள இளைஞர்கள் வீதிகளில் உற்சாகத்துடன் ஆரவாரம் செய்தனர். கான் யூனிஸைச் சேர்ந்த அப்துல் மஜீத் என்ற இளைஞர், "போர் நிறுத்தம், இரத்தகளரி, கொலைகளுக்கு முடிவு வந்துவிட்டது. ஒட்டுமொத்த காசா பகுதி, அரபு மக்கள் மற்றும் உலகமே மகிழ்ச்சி அடைகிறது" என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

காசாவில் இரண்டு ஆண்டுகளாக நடந்த கொலைகளுக்கும் இனப்படுகொலைக்கும் பிறகு பாலஸ்தீனிய குடிமக்களால் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட தருணம் இது என்று காலெத் ஷாத் என்ற இளைஞர் குறிப்பிட்டார்.

Tags:    

Similar News