உலகம்

இங்கிலாந்தில் சட்டவிரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Published On 2023-03-12 21:22 GMT   |   Update On 2023-03-12 21:22 GMT
  • இங்கிலாந்தில் சட்டவிரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
  • அவர்கள் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருவதாக இங்கிலாந்து பிரதமர் தெரிவித்தார்.

லண்டன்:

இங்கிலாந்தில் கடந்த சில ஆண்டுகளாக சட்ட விரோத குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் இந்தியர்களின் எண்ணிக்கையும் சமீப காலமாக அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.

சிறிய படகுகளில் ஆங்கில கால்வாயைக் கடந்து இங்கிலாந்து கரைகளில் இறங்கும் இந்தியர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக அந்த நாட்டு உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

அந்தவகையில் கடந்த 2018, 19-ம் ஆண்டுகளில் இந்தியர்களின் சட்ட விரோத குடியேற்றம் இல்லாத நிலையில், 2020-ல் 64 பேர், 2021-ல் 67 பேர் இங்கிலாந்தில் நுழைந்துள்ளனர். அதேநேரம் கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 683 ஆக அதிகரித்து இருக்கிறது.

இவ்வாறு சட்ட விரோதமாக நுழைவோரை திருப்பி அனுப்பும் வகையில் இந்தியா, பாகிஸ்தான், செர்பியா உள்ளிட்ட நாடுகளுடன் ஒப்பந்தம் போடப்பட்டு இருப்பதாகவும், அதன் அடிப்படையில் அவர்கள் தங்கள் நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டு வருவதாகவும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

சட்ட விரோதமாக நுழைபவர்கள் தஞ்சம் கோரமுடியாது எனக்கூறிய அவர், போலியான மனித உரிமைகளையும் முன்வைக்க முடியாது என தெரிவித்தார்.

Tags:    

Similar News