உலகம்

துபாய் இந்து கோவில் 

துபாயில் இந்து கோவில் திறப்பு- ஐக்கிய அரபு அமீரக அமைச்சர் திறந்து வைத்தார்

Published On 2022-10-05 04:48 GMT   |   Update On 2022-10-05 06:06 GMT
  • கடந்த 2020 ஆண்டு கோவில் கட்டுமானத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
  • அனைத்து மதத்தினருக்கும் அனுமதி வழங்கப் பட்டுள்ளது.

துபாய்:

துபாயின் ஜெபல் அலி பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய இந்து கோவிலை ஐக்கிய அரபு அமீரக அரசின்  சகிப்புத்தன்மைத்துறை அமைச்சர் ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான் நேற்று திறந்து வைத்துள்ளார். இந்த கோவில் சிந்தி குரு தர்பாரின் மிக பழமை வாய்ந்த கோயிலாகும். 

இதை புதுப்பிக்கும் நடவடிக்கையாக கடந்த 2020 ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த கோயில் நேற்று திறக்கப்பட்டுள்ளதன் மூலம் துபாய் வாழ் இந்தியர்களின் 10 ஆண்டு கால கனவு நிறைவேறியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கோயிலின் உட்புறத்தில் 16 தெய்வங்கள் இடம் பெற்றுள்ளதாகவும், அனைத்து மதத்தினர் வழிபாடு நடத்தவும், மற்றும் பிற பார்வையாளர்களுக்கும் இங்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வெள்ளை பளிங்குக் கற்களால் கட்டப்பட்டுள்ள இந்த கோயிலின் தூண்கள் மற்றும் முகப்பு பகுதி அரபு மற்றும் இந்து முறைப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரார்த்தனை மண்டபத்தில் இளம் சிவப்பு தாமரை முப்பரிமாண வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஏராளமான மணிகளும் அங்கு தொங்க விடப்பட்டுள்ளன.

காலை 6:30 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும் இந்த கோவிலுக்கு வருவதற்கு முன்பு பக்தர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. QR-குறியீடு அடிப்படையில் முன்பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News