கனடா மீதான வரிவிதிப்பு 35 சதவீதமாக உயர்வு - டிரம்ப் அறிவிப்பு
- கனடா பிரதமர் மார்க் கார்னிக்கு டிரம்ப் கடிதம் எழுதி உள்ளார்.
- வரிவிதிப்பு, அமெரிக்கா-கனடா இடையிலான விரிசலை மேலும் அதிகரிப்பதாக அமைந்துள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற டிரம்ப், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பை அறிவித்தார். பின்னர் அந்த வரிவிதிப்பை ஜூலை 9-ந் தேதிவரை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்தார். அந்த காலக்கெடு முடிவடைய இருந்தபோது, காலக்கெடுவை ஆகஸ்டு 1-ந் தேதிவரை ஒத்திவைத்தார்.
ஆகஸ்டு 1-ந் தேதியில் இருந்து, ஜப்பான், வங்காளதேசம், மலேசியா உள்பட 14 நாடுகளுக்கு எவ்வளவு வரி விதிக்கப்படும் என்று அந்த நாடுகளுக்கு டிரம்ப் கையெழுத்திட்ட கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
அந்த பட்டியலில் கனடா இடம் பெறவில்லை. இந்நிலையில், கனடா பிரதமர் மார்க் கார்னிக்கு டிரம்ப் கடிதம் எழுதி உள்ளார். அதில், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் கனடா பொருட்கள் மீதான வரி, 35 சதவீதமாக உயர்த்தப்படும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.
'பென்டானில்' என்ற வலி நிவாரண மருந்தின் கடத்தலை தடுக்க கனடாவை வலியுறுத்தும் முயற்சியாக இது கருதப்படுகிறது. ஆனால் அதுமட்டுமே கனடாவுடனான சவால் அல்ல என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
இந்த வரிவிதிப்பு, அமெரிக்கா-கனடா இடையிலான விரிசலை மேலும் அதிகரிப்பதாக அமைந்துள்ளது.