உலகம்

நிஜ்ஜார் கொலை - பாராளுமன்ற பேச்சிற்கு காரணம் வெளியிட்ட ட்ரூடோ

Published On 2023-12-13 13:36 GMT   |   Update On 2023-12-13 13:36 GMT
  • கனடா குடிமக்களுக்கு இந்தியா சில மாதங்கள் விசாவை நிறுத்தி வைத்தது
  • தாங்கள் எளிதாக தாக்கப்படலாம் என கனடா மக்கள் அஞ்சியதாக ட்ரூடோ கூறினார்

இந்தியாவிலிருந்து ஒரு பகுதியை பிரித்து சீக்கியர்களுக்காக காலிஸ்தான் எனும் தனி நாடு கோரி துவக்கப்பட்டது காலிஸ்தான் பிரிவினை அமைப்பு. இதன் முக்கிய தலைவராக இருந்தவர் ஹர்திப் சிங் நிஜ்ஜார் (45).

கடந்த ஜூன் மாதம், கனடாவின் வேன்கூவர் புறநகர் பகுதியில் ஒரு வழிபாட்டு தலத்திற்கு வெளியே ஹர்திப் துப்பாக்கி ஏந்திய இருவரால் சுட்டு கொல்லப்பட்டார்.

இப்பின்னணியில் கடந்த செப்டம்பரில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு பாராளுமன்றத்தில் ஹர்திப் சிங் கொலையில் இந்திய உளவுத்துறை அதிகாரிகளுக்கு பங்கு இருப்பதாக அறிவித்தார்.

பெரும் சர்ச்சை ஏற்படுத்திய இந்த விவகாரம் இரு நாடுகளுக்கிடையே நிலவி வந்த நல்லுறவை பின்னுக்கு தள்ளியது. கனடாவிலிருந்து இந்தியாவிற்கு வர விரும்பும் குடிமக்களுக்கு சில மாதங்களுக்கு இந்தியா விசா வழங்குதலை நிறுத்தி வைத்தது.

இந்நிலையில், இந்த சர்ச்சை குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியிருப்பதாவது:

இரு நாடுகளுக்கு இடையே அரசியல் ரீதியாகவும், அதிகாரிகள் மட்டத்திலும் அமைதியாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அது போதாது என நாங்கள் கருதினோம். எங்கள் நாட்டு மக்களின் பாதுகாப்பிற்கு எதிராக எந்த சம்பவமும் நடைபெற கூடாதென வலியுறுத்தும் விதமாக ஒரு அழுத்தமான நடவடிக்கை எடுக்க விரும்பினோம். இங்கு கனடாவில் பலர் தாங்கள் எளிதாக தாக்கப்படலாம் எனும் அச்சத்தில் வாழ்ந்து வந்ததனால் அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக நாங்கள் செயல்பட வேண்டி இருந்தது. அதன் காரணமாகவே எங்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்திய அரசாங்கத்திற்கு இது போன்ற சம்பவங்களில் பங்குள்ளது என உரக்க கூறினோம். இதன் மூலம், இது போன்ற சம்பவங்களில் இந்தியா ஈடுபட்டாலோ அல்லது ஈடுபட நினைத்தாலோ அது தடுக்கப்படும் என உறுதி செய்து கொள்ள விரும்பினோம்.

இவ்வாறு ட்ரூடோ தெரிவித்தார்.

Tags:    

Similar News