உலகம்

தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி

Published On 2024-03-28 04:17 GMT   |   Update On 2024-03-28 04:17 GMT
  • ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் சட்ட மசோதா இயற்ற தாய்லாந்தில் தொடர்ந்து போராட்டம் நடந்தது.
  • மன்னரின் ஒப்புதலுக்கு பின்னர் இது முழுமையாக அமலுக்கு வரவுள்ளது.

பாங்காங்:

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான தாய்லாந்து சொகுசு விடுதிகளுக்கும், கேளிக்கைகளுக்கும் பெயர்போன நாடாக விளங்குகிறது. புத்த மதத்தை பின்பற்றும் நாடான தாய்லாந்தில் பொதுமக்களுக்கு அதிக அளவில் சுதந்திரம் அளிப்பதில் முன்னுரிமை கொடுத்து வருகிறது.

குடிமக்களுக்கு மட்டுமின்றி வெளிநாட்டினருக்கு சொர்க்கப்பூமியாக நிகழும் தாய்லாந்துக்கு புதுமண ஜோடிகள், வாலிபர்கள் அதிக அளவில் வருகை தருவர். ஓரின சேர்க்கையாளர்கள் அதிக அளவில் வசிக்கும் நாடாக கருதப்பட்டாலும் அவர்களின் திருமணத்துக்கு அங்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்படவில்லை.

இந்தநிலையில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் சட்ட மசோதா இயற்ற தாய்லாந்தில் தொடர்ந்து போராட்டம் நடந்தது.

இதனையடுத்து பாராளுமன்றத்தில் இதற்கான மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவிற்கு ஆதரவாக எதிர்க்கட்சியினர் உள்பட பெரும்பான்மையான எம்.பி.க்கள் வாக்களித்தனர். 415 எம்.பி.க்கள் எண்ணிக்கை கொண்ட தாய்லாந்து பாராளுமன்றத்தில் 10 பேர் மட்டுமே மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர்.

இந்தநிலையில் பெரும்பான்மை எம்.பி.க்கள் ஆதரவுடன் ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்டமசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. மன்னரின் ஒப்புதலுக்கு பின்னர் இது முழுமையாக அமலுக்கு வரவுள்ளது. இதன் மூலம் தைவான், நேபாளத்தை அடுத்து ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அனுமதி அளிக்கும் ஆசிய நாடுகளில் ஒன்றாக தாய்லாந்து மாறும். 

Tags:    

Similar News