உலகம்

நீண்ட காலத் தீர்வுகளைக் காண விரைவாக செயல்பட இலங்கை தலைவர்களுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்

Published On 2022-07-10 09:12 IST   |   Update On 2022-07-10 09:12:00 IST
  • இலங்கையில் பிரதமர் பதவியில் இருந்து விலகிய ரணில் விக்ரமசிங்கேவின் தனிப்பட்ட இல்லத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.
  • கோத்தபய ராஜபக்சே வரும் 13ந் தேதி பதவி விலகுவதாக தெரிவித்துள்ளதாக சபாநாயகர் அபேவர்தன கூறியுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையால் மக்கள் நடத்தி வரும் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியது. இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் பொருட்களை கைப்பற்றியுள்ளதுடன் அங்கேயே தங்கி வருகின்றனர். இதற்கிடையே, கோத்தபய ராஜபக்சே மாளிகையில் இருந்து தப்பியோடிவிட்டார்.

தொடர்ந்து, இலங்கையில் பிரதமர் பதவியில் இருந்து விலகிய ரணில் விக்ரமசிங்கேவின் தனிப்பட்ட இல்லத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.

முன்னதாக நேற்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில், ரணில் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதேபோல் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி அதிபர் பதவியில் இருந்து விலகுமாறு கோத்தபய ராஜபக்சேவை வலியுறுத்தி சபாநாயகர் அபேவர்தன கடிதம் எழுதினார். அதற்கு பதில் அளித்துள்ள கோத்தபய, வரும் 13ந் தேதி பதவி விலகுவதாக தெரிவித்துள்ளதாக அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் வெடித்த மக்களின் போராட்டம், உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நீண்ட காலத் தீர்வுகளைக் காண விரைவாக செயல்படுமாறு இலங்கைத் தலைவர்களை அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அந்தோணி பிலிங்கன் கூறுகையில், " எந்தவொரு புதிய அரசாங்கமும் நீண்ட கால பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதற்கும், இலங்கை மக்களின் அதிருப்தியை நிவர்த்தி செய்வதற்கும், தீர்வுகளை விரைவாகக் கண்டறிந்து செயல்படுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

Tags:    

Similar News