உலகம்

ஆப்கானிஸ்தானில் அரசியல் கட்சிகளுக்கு தடை- தலிபான்கள் அதிரடி உத்தரவு

Published On 2023-08-17 10:59 IST   |   Update On 2023-08-17 11:20:00 IST
  • அரசாங்கத்தின் உயர்மட்ட தலைமையின் ஒப்புதலுடன் அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
  • 2021-ம் ஆண்டு வரை ஆப்கானிஸ்தான் நீதி அமைச்சகத்தில் 70 பெரிய மற்றும் சிறிய அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டன.

காபூல்:

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறிய பிறகு ஜனநாயக ரீதியிலான ஆட்சியை அகற்றிவிட்டு தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றி புதிய அரசாங்கத்தை அமைத்தனர். அவர்கள் மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தனர்.

குறிப்பாக பெண்கள் கல்வி கற்க தடை விதித்தனர். மேலும் பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

நேற்று தலிபான்கள், அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றிய 2-வது ஆண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து தலிபான் அரசாங்கத்தின் நீதி அமைச்சர் அப்துல் ஹக்கீம் ஷரீ கூறியதாவது:-

"ஷரியாத் சட்டத்தில் அரசியல் கட்சிகளுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. ஆப்கானிஸ்தானில் அரசியல் கட்சிகள் செயல்பட ஷரியத்தில் அடிப்படை இல்லை. அவர்கள் தேசிய நலனுக்கு சேவை செய்வதில்லை. அவர்களை தேசம் பாராட்டுவதில்லை" என்றார்.

அரசாங்கத்தின் உயர்மட்ட தலைமையின் ஒப்புதலுடன் அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

2021-ம் ஆண்டு வரை ஆப்கானிஸ்தான் நீதி அமைச்சகத்தில் 70 பெரிய மற்றும் சிறிய அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News