உலகம்

அமெரிக்காவில் கேரள பெண் டாக்டர் விபத்தில் பலி

Published On 2022-12-14 04:41 GMT   |   Update On 2022-12-14 04:41 GMT
  • மினி வெட்டிக்கல் விபத்தில் சிக்கிய விபரம் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் அங்கு விரைந்து சென்றனர்.
  • மினி வெட்டிக்கல் இறந்துவிட்ட தகவல் அறிந்ததும் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களும் சோகத்தில் மூழ்கினர்.

ஹூஸ்டன்:

கேரள மாநிலம் எர்ணாகுளத்தை அடுத்த ராமமங்கலத்தை சேர்ந்தவர் மினி வெட்டிக்கல் (வயது 52).

மினி வெட்டிக்கல் அமெரிக்காவின் ஹூஸ்டன் மாகாணத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வந்தார். மேலும் சமூக வலைதளங்களிலும் ஆர்வமாக இருந்தார்.

சம்பவத்தன்று இவர் ஆஸ்பத்திரியில் பணி முடிந்து வீட்டுக்கு காரில் வந்தார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள், மினி வெட்டிக்கல் வந்த கார் மீது வேகமாக மோதியது.

இந்த விபத்தில் காரில் இருந்த டாக்டர் மினி வெட்டிக்கல் படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மினி வெட்டிக்கல் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதற்கிடையே மினி வெட்டிக்கல் விபத்தில் சிக்கிய விபரம் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் அங்கு விரைந்து சென்றனர்.

மேலும் அவர் இறந்துவிட்ட தகவல் அறிந்ததும் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களும் சோகத்தில் மூழ்கினர். பலியான மினி வெட்டிக்கல்லுக்கு திருமணமாகி கணவரும் குழந்தைகளும் உள்ளனர்.

மினி வெட்டிக்கல் இறந்தது பற்றி அவரது நண்பர்கள் கூறும்போது, மினி வெட்டிக்கல் சிறந்த நடன கலைஞர் என்றும், சமூக பணிகளில் அதிக ஆர்வம் கொண்டவர் எனவும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News