பொது இடங்களில் ஹிஜாப் அணியாத பெண்களை கண்டறிய கண்காணிப்பு கேமராக்கள்
- ஹிஜாப் சட்டத்தை மீறுபவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுக்கப்படும்.
- பொது இடங்களில் ஹிஜாப் அணியாத பெண்களை கண்டறிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
ஈரானில் பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டியது கட்டாயமாகும். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஹிஜாப்பை சரியாக அணியாததாக கூறி இளம்பெண் மாஷா அமினியை போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார். இதனால் ஈரானில் ஹிஜாப்புக்கு எதிராக பெரும் போராட்டங்கள் வெடித்தது. போராட்டத்தை ஒடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தது.
இந்த நிலையில் பொது இடங்களில் ஹிஜாப் அணியாத பெண்களை கண்டறிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக போலீசார் கூறும்போது, பொது இடங்கள் மற்றும் சாலைகளில் ஸ்மார்ட் கேராக்கள் மூலம் விதிமுறைகளை மீறுபவர்கள் கண்டறியப்படுவார்கள். ஹிஜாப் சட்டத்தை மீறுபவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுக்கப்படும். இந்த குற்றத்தை மீண்டும் செய்தால் ஏற்படும் சட்ட ரீதியான விளைவுகள் குறித்து அவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
முதலில் எச்சரிக்கை பெறும் நபர்கள் மீண்டும் குற்றம் செய்தால் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்றனர். மேலும் காரில் பயணிப்பவர்களில் யாராவது ஆடை குறியீட்டை மீறினால் வாகன உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுக்கப்படும். மீண்டும் குற்றம் செய்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவித்தனர்.