பயங்கரவாதிகள் தொடர்பில் முகமது யூனுஸ்.. அமெரிக்காவுக்கு விற்கப்படும் வங்கதேசம் - ஷேக் ஹசீனா பரபரப்பு
- அதிகாரத்தைக் கைப்பற்ற யூனுஸ் தடைசெய்யப்பட்ட இயக்கங்களின் உதவியைப் பெற்றார்.
- பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு நாங்கள் பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்தோம்.
வங்கதேசத்தில் ராணுவத்திற்கும் இடைக்கால பிரதமர் முகமது யூனுஸுக்கும் இடையே பதற்றம் தொடர்கிறது. இராணுவம் விரைவில் தேர்தலை நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள நிலையில், அழுத்தம் கொடுக்கப்பட்டால் பதவி விலகுவதாக யூனுஸ் அச்சுறுத்தினார்.
இத்தகைய அரசியல் கொந்தளிப்புக்கு மத்தியில், வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, முகமது யூனுஸ் மீது ஒரு பெரிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பயங்கரவாதிகளின் உதவியுடன் யூனுஸ் அதிகாரத்தைக் கைப்பற்றியதாகவும், அவருக்கு பின்னால் சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட பல பயங்கரவாத அமைப்புகள் இருப்பதாகவும் ஹசீனா கூறினார்.
தனது பேஸ்புக் பதிவில் ஷேக் ஹசீனா இந்த கருத்துகளை தெரிவித்தார். "அதிகாரத்தைக் கைப்பற்ற யூனுஸ் தடைசெய்யப்பட்ட இயக்கங்களின் உதவியைப் பெற்றார்.
அமெரிக்கா செயிண்ட் மார்ட்டின் தீவை விரும்பியபோது, என் தந்தை அதற்கு உடன்படவில்லை. அவர் தனது உயிரைக் கொடுக்க வேண்டியிருந்தது. எனது விதியும் அப்படியே. ஏனென்றால் அதிகாரத்தில் நீடிக்க நாட்டை விற்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒருபோதும் இருந்ததில்லை.
ஆனால் இன்று என்ன ஒரு துரதிர்ஷ்டம். அப்படிப்பட்ட ஒருவர் ஆட்சியில் உள்ளார். அவர் வங்க தேசத்தை அமெரிக்காவிற்கு விற்றுக் கொண்டிருக்கிறார். வங்கதேசத்தில் தனது கட்சிக்கு தடை விதித்தது அரசியலமைப்பிற்கு விரோதமானது.
வங்கதேசத்தின் மண்ணின் ஒரு அங்குலத்தைக்கூட யாருக்கும் விட்டுக்கொடுக்கும் நோக்கம் யாரிடமும் இருக்க முடியாது. ஒரே ஒரு பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு நாங்கள் பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்தோம். பலர் கைது செய்யப்பட்டனர், இப்போது வங்கதேச சிறைகள் காலியாக உள்ளன. இப்போது வங்கதேசத்தில் பயங்கரவாதிகள் ஆட்சி செய்கிறார்கள்.
நீண்ட போராட்டத்திற்குப் பிறகு நாம் அடைந்த நமது மாபெரும் வங்காள தேசத்தின் அரசியலமைப்பு ஒரு தீவிரவாதத் தலைவரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது" என்று ஷேக் ஹசீனா தெரிவித்தார்.
யூனுஸ் தலைமை ஆலோசகர் பதவியை வகிப்பதற்கு எந்த அரசமைப்பு உரிமையும் இல்லை என்று ஹசீனா தெரிவித்தார்.
கடந்த ஆகஸ்ட் 2024 இல் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு கிடைத்து வந்த இடஒதுக்கீட்டை எதிர்த்து ஏற்பட்ட மாணவர் போராட்டங்களினால் ஷேக் ஹசீனா ஆட்சி கழிவிக்கப்பட்டு அவர் இந்தியாவுக்கு தப்பி வந்தது குறிப்பிடத்தக்கது.