உலகம்

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

கொரோனா ஊரடங்கை தளர்த்த வேண்டும் - சீன அதிபருக்கு எதிராக கோஷமிட்ட மக்கள்

Published On 2022-11-27 15:45 GMT   |   Update On 2022-11-27 15:45 GMT
  • சீனாவில் கொரோனா ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
  • அரசு விதித்துள்ள கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

பீஜிங்:

சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் தற்போது வேகமெடுத்து வருகிறது. கடந்த சில நாட்களாக தினமும் 30 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. வைரஸ் பரவல் அதிகரிப்பால் பல்வேறு மாகாணங்களில் கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை சீனா விதித்து வருகிறது.

சீனாவின் ஜிங்ஜங்க் மாகாணத்தில் 100 நாட்களுக்கு மேலாக முழுமையான ஊரடங்கு அமலில் உள்ளது.

இதற்கிடையே, ஊரடங்கு அமலில் உள்ள ஜிங்ஜங்க் மாகாணத்தில் உரும்யூ நகரில் கடந்த 24-ம் தேதி ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். ஊரடங்கு காரணமாக அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகளை அதிகாரிகள் சீல் வைத்து மூடியுள்ளனர். இதனால் அங்கு தீ பற்றியபோது வீடுகளை விட்டு மக்கள் வெளியேற முடியாமல் உயிரிழந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இந்நிலையில், சீன அரசு விதித்துள்ள கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக அங்குள்ள மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். உரும்யூ நகரில் நேற்று முன்தினம் திரண்ட மக்கள் சீன அரசுக்கு எதிராகவும், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தவும் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிராகவும் மக்கள் கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News