VIDEO: தென்னாப்பிரிக்காவின் ஜொகன்னஸ்பர்கில் பாடப்பட்ட தமிழ் பாடல் - கைத்தட்டி ரசித்த பிரதமர் மோடி
- வாட்டர்க்லூப் விமானப்படை தளத்தில் அவருக்கு பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.
- கலைஞர்கள், கலாசார பாடல்களை பாடி, ஆடி வரவேற்றனர்.
இந்தியா உள்ளிட்ட 20 நாடுகள் அடங்கிய ஜி-20 நாடுகள் அமைப்புக்கு இந்த ஆண்டு தென்னாப்பிரிக்கா தலைமை வகிக்கிறது. அதனால் இந்த ஆண்டின் ஜி-20 மாநாடு, தென்னாப்பிரிக்காவின் ஜொகன்னஸ்பர்க் நகரில் நடக்கிறது.
தென்னாப்பிரிக்க அதிபர் சிறில் ரமாபோசா அழைப்பின்பேரில், மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
அதற்காக அவர் 3 நாட்கள் பயணமாக நேற்று காலை தென்னாப்பிரிக்கா புறப்பட்டு சென்றார். நேற்று மாலை பிரதமர் மோடி ஜொகன்னஸ்பர்க் போய்ச் சேர்ந்தார். அங்குள்ள வாட்டர்க்லூப் விமானப்படை தளத்தில் அவருக்கு பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. கலைஞர்கள், கலாசார பாடல்களை பாடி, ஆடி வரவேற்றனர். அப்போது, 'கங்கா மையா' என்ற தமிழ் பாடல் பாடப்பட்டது. இதனை மெய்மறந்து பிரதமர் மோடி கேட்டு ரசித்தார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
ஜொகன்னஸ்பர்கில் தென்னாப்பிரிக்காவின் கிர்மிட்டியா பாடலுடன் 'கங்கா மையா' நிகழ்ச்சியைக் கண்டது எனக்கு மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் தந்தது. இந்த நிகழ்ச்சியின் மற்றொரு சிறப்பம்சம் இந்தப் பாடல் தமிழில் பாடப்பட்டது! பல ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்தவர்களின் நம்பிக்கையையும் தொடர்பறாத மனப்பான்மையையும் இந்தப் பாடல் தன்னகத்தே கொண்டுள்ளது. வாழ்க்கையில் அவர்கள் ஏராளமான துன்பங்களைச் சந்தித்தனர், ஆனால் அது அவர்களின் ஊக்கத்தைக் குலைக்கவில்லை. பாடல்கள் மற்றும் பிரார்த்தனைகள் மூலம் அவர்கள் தங்கள் இதயங்களில் இந்தியாவை உயிர்ப்புடன் வைத்திருந்தனர். எனவே, இந்தக் கலாச்சாரத் தொடர்பு உயிரோட்டமாக இருப்பதைக் காண்பது மெச்சத்தக்கது என்று கூறியுள்ளார்.