உலகம்

ஓமனில் மேலும் 6 புதிய விமான நிலையங்கள் பயன்பாட்டுக்கு வருகிறது

Published On 2024-05-24 03:02 GMT   |   Update On 2024-05-24 03:02 GMT
  • தற்போது 1.7 கோடி பயணிகள் ஓமன் விமான நிலையங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
  • விமான நிலையங்கள் முசந்தம் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்படும்.

மஸ்கட்:

ஓமன் நாட்டின் சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் நைப் அல் அப்ரி கூறியதாவது:-

ஓமன் நாட்டில் தற்போது மஸ்கட், சலாலா, சுகர் மற்றும் துகும் உள்ளிட்ட இடங்களில் 4 விமான நிலையங்கள் உள்ளன. ஓமன் நாட்டுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து கணிசமாக அதிகரித்து வருகிறது. மேலும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது. தற்போது 1.7 கோடி பயணிகள் ஓமன் விமான நிலையங்களை பயன்படுத்தி வருகின்றனர். வருகிற 2040-ம் ஆண்டில் இந்த பயணிகள் எண்ணிக்கை 5 கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு புதிய விமான நிலையங்கள் கட்டப்பட உள்ளன.

வருகிற 2028-29-ம் ஆண்டில் மட்டும் புதிதாக 6 விமான நிலையங்கள் பயன்பாட்டுக்கு வரும். இந்த விமான நிலையங்கள் முசந்தம் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்படும். இதனை தொடர்ந்து ஓமன் நாட்டில் மேலும் புதிய விமான நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு மொத்த விமான நிலையங்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரிக்கும். முசந்தம் நகரில் அமைக்கப்பட்டு வரும் புதிய விமான நிலையத்தின் பணிகள் நிறைவடைந்து வருகிற 2028-ம் ஆண்டு இறுதியில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்படும்.

இதனை தொடர்ந்து ஓமன் நாட்டின் பிற இடங்களில் அமைக்கப்பட்டு வரும் விமான நிலையங்கள் செயல்பட தொடங்கும். இந்த புதிய விமான நிலையங்கள் மூலம் உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News