உலகம்

நீருக்கடியில் வடகொரியா புதிய அணு ஆயுத சோதனை

Published On 2023-03-24 08:10 GMT   |   Update On 2023-03-24 08:10 GMT
  • கடலுக்கு அடியில் சுமார் 80 முதல் 120 மீட்டர் ஆழத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.
  • புதிய அணு ஆயுத சோதனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சியோல்:

அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. வடகொரியா தற்போது கடுமையான உணவு பஞ்சத்தில் சிக்கி தவித்தாலும் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டது.

இந்த மாதத்தில் மட்டும் தொடர்ச்சியாக இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தென் கொரியாவும், அமெரிக்காவும் கொரியா தீபகற்ப பகுதியில் கூட்டாக ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருவதால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா இந்த நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக இன்று நீருக்கடியில் புதிய அணு ஆயுத சோதனை நடத்தி அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. கிழக்கு கடற்கரை பகுதியில் நீருக்கடியில் அணுசக்தி தாக்குதல் நடத்தும் டிரோன் பரிசோதனையை நடத்தி உள்ளதாக வடகொரியா அரசு ஊடகம் தெரிவித்து உள்ளது.

கடலுக்கு அடியில் சுமார் 80 முதல் 120 மீட்டர் ஆழத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. நீருக்குள் கதிரியக்கத்தை ஏற்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்ட இந்த டிரோன் அணுசக்தி போரில் எச்சரிக்கையுடன் செயல்படும் என அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்து உள்ளார்.

தென்கொரியாவும், அமெரிக்காவும் கூட்டாக பயிற்சி மேற்கொண்டு வரும் சூழ்நிலையில் வடகொரியா நடத்தி இருக்கும் இந்த புதிய அணு ஆயுத சோதனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Tags:    

Similar News