உலகம்

மொராக்கோ நிலநடுக்கம்: 3 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை- 2700 பேர் படுகாயம்

Published On 2023-09-11 22:15 GMT   |   Update On 2023-09-11 22:15 GMT
  • கட்டிட இடுபாடுகளில் இருந்து உடல்கள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருவதால் பலி எண்ணிக்கை அதிகரித்தவாறு உள்ளது.
  • பலி எண்ணிக்கை கடந்த 10ம் தேதி அன்று 2000-ஐ தாண்டியுள்ளது என மொராக்கோ உள்துறை அமைச்சகம் கூறியது.

வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் கடந்த 8ம் தேதி நள்ளிரவு ஏற்பட்ட நிலநடுக்கம் அந்நாட்டையே உலுக்கியுள்ளது.

அந்நாட்டின் சுற்றுலா நகரமான மராகெச் அருகே அட்லஸ் மலையில் பூமிக்கு அடியில் 18.5 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டு உண்டான நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது.

தொடர்ந்து, 19 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் மராகெச் மற்றும் அங்குள்ள மலை கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள் மற்றும் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தது.

சீட்டு கட்டு சரிவது போல் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. நள்ளிரவு நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் உறங்கி கொண்டிருந்த பலரால் வீடுகளை விட்டு உடனடியாக வெளியேற முடியவில்லை.

இதனால் கட்டிட இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கி கொண்டனர். மீட்பு படையினர் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இறந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு வருகிறது. அதே போல் காயம் அடைந்தவர்களும் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

கட்டிட இடுபாடுகளில் இருந்து உடல்கள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருவதால் பலி எண்ணிக்கை அதிகரித்தவாறு உள்ளது. நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேல் இருக்கலாம் என முதல் நாளில் அறிவிக்கப்பட்டது.

அங்கு தொடர்ந்து மீட்புப்பணிகள் நடந்து வந்த நிலையில் பலி எண்ணிக்கை கடந்த 10ம் தேதி அன்று 2000-ஐ தாண்டியுள்ளது என மொராக்கோ உள்துறை அமைச்சகம் கூறியது.

இந்நிலையில், நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக மொராக்கோ உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதில், 2500 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News