உலகம்

கரை ஒதுங்கிய திமிங்கிலங்களில் 50க்கும் மேல் பலி: ஆஸ்திரேலிய கடற்கரையில் மர்மம்

Published On 2023-07-26 05:47 GMT   |   Update On 2023-07-26 05:47 GMT
  • 100-க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கரை ஒதுங்கி உயிருக்கு போராட்டம்
  • உயிருடன் உள்ள திமிங்கலங்களை ஆழ்கடலுக்குள் விட முயற்சி

டால்பின் மீன் வகைகளில் பெரிய மீன் வகையை சேர்ந்தவை பைலட் திமிங்கலங்கள். அவை ஒரு குழுவாக நீந்தி செல்லும்போது, ஒரு திமிங்கலத்தை பின்தொடர்ந்து மற்ற அனைத்தும் ஒன்றாக செல்வதால் இவ்வகை திமிங்கலங்கள் பைலட் திமிங்கலங்கள் என அழைக்கப்படுகிறது.

நேற்று முன்தினம் ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரை பகுதியில் 100-க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள் திடீரென கரை ஒதுங்க தொடங்கின. அவற்றில் 50-க்கும் மேற்பட்டவை நேற்று உயிரிழந்தது.

இந்த திமிங்கல குழு முதல் முதலில் மேற்கு ஆஸ்திரேலியாவின் துறைமுக நகரமான அல்பனியின் செய்ன்ஸ் பீச் பகுதியில் காணப்பட்டது. மாலை நெருங்கும்போது கடற்கரை ஓரத்தின் ஒதுங்கின.

உடனே மேற்கு ஆஸ்திரேலியாவின் பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் ஈர்ப்புத்துறை, திமிங்கலங்களை கண்காணிக்க ஒரு இரவு முகாமை அமைத்தது.

"ஒரே இரவில் 51 திமிங்கலங்கள் இறந்து விட்டன. இன்னும் 46 திமிங்கலங்கள் உள்ளன. அவற்றை மீண்டும் தண்ணீருக்குள் விட்டுவிட்டு, மேலும் ஆழமான பகுதிகளுக்கு நீந்தி செல்ல ஊக்குவிப்பதுதான் தற்போது எங்கள் நோக்கம். எங்களால் முடிந்தவரை எத்தனை திமிங்கலங்களை காப்பாற்ற முடியுமோ காப்பாற்றுவோம்" என அந்த துறையின் மேலாளரான பீட்டர் ஹார்ட்லி கூறினார்.

திமிங்கலங்களுக்கு உதவும் குழுவில் ஆஸ்திரேலியாவின் பெர்த் மிருகக்காட்சி சாலையின் கால்நடை மருத்துவர்கள் மற்றும் கடல் விலங்கின நிபுணர்கள் உள்ளனர். அவர்கள் கப்பல்கள் மற்றும் சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி திமிங்கலங்களை கடலுக்குள் விட போராடி வருகின்றனர்.

நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களும் உதவ முன்வந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அசாதாரண நிகழ்வுக்கு ஏதேனும் நோய் காரணமாக இருக்கலாம் என வனவிலங்கு நிபுணர்கள் கூறுகிறார்கள்.

Tags:    

Similar News