கனமழை, நிலச்சரிவால் தத்தளிக்கும் இலங்கை: பலி எண்ணிக்கை 123-ஆக உயர்வு
- அதிகபட்சமாக கண்டி மாவட்டத்தில் 51 பேர் உயிரிழந்துள்ளனர்.
- மாயமான 130-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இலங்கையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் அந்நாட்டின் கடல்பகுதியில் உருவான டிட்வா புயல் காரணமாக பலத்த மழை கொட்டியது. தொடர்ந்து பெய்த கனமழையால் ஆறுகள், நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிந்து பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மேலும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. தலைநகர் கொழும்பு உள்பட நாட்டின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இதற்கிடையே வெள்ளம்-நிலச்சரிவுகளில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 123-ஆக உயர்ந்து உள்ளது. மொத்தமுள்ள 25 நிர்வாக மாவட்டங்களில் 17 மாவட்டங்கள் கடும் பாதிப்பை அடைந்துள்ளன. இதில் அதிகபட்சமாக கண்டி மாவட்டத்தில் 51 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மாயமான 130-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 488 நிவாரண மையங்களில் 43,925 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இந்திய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். மேலும் இலங்கைக்கு இந்தியா உதவிகளை அளிக்கும் என்று தெரிவித்தார். இதையடுத்து ஆபரேசன் சாகர் பந்து திட்டத்தின் கீழ், பேரிடர்கால உதவிகள் மற்றும் நிவாரணப் பொருட்களை இந்தியா அவசரமாக அனுப்பியது.